×

திமுக உடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம், கொமதேகவுக்கு நாமக்கல்

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மாநில பொது செயலாளர் முகமது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், தேசிய செயலாளர் அப்துல் பாசித், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஒப்பந்தத்தில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஒரு தொகுதியில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும்.

பிற கூட்டணிக் கட்சிகளின் இறுதி தொகுதிப் பங்கீட்டுக்கு உட்பட்டு இப்பட்டியல் உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திமுகவுடன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான குழுவினர் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தில், ‘திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. நாமக்கல் தொகுதியில் போட்டியிடும். பிற கூட்டணிக் கட்சிகளின் இறுதி தொகுதிப் பங்கீட்டுக்கு உட்பட்டு இப்பட்டியல் உறுதி செய்யப்படும்’ என கூறப்பட்டுள்ளது. மேலும் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன ராஜ், பொருளாளர் செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பின்னர் காதர் மொகிதீன் அளித்த பேட்டி: ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மிகச்சிறப்பாக 5 ஆண்டுகாலம் பணியாற்றிய நவாஸ்கனி தொடர்ந்து அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து கட்சி சார்பாகவும், குறிப்பாக திமுக சார்பிலும் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த காரணத்திற்காக, நாங்கள் அதனையே முடிவாக எடுத்து இருக்கிறோம். ராமநாதபுரம் வேட்பாளராக நவாஸ் கனியை அறிவிக்க உள்ளோம். விரைவில் திருச்சியில் பொதுக்குழுவை கூட்டி முறைப்படி அறிவிப்போம். ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் அளித்த பேட்டியில், ‘‘2019ம் ஆண்டு போட்டியிட்டது போல உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம். எங்களுடைய செயற்குழு, ஆட்சிமன்ற குழு கூடி வேட்பாளரை தேர்வு செய்வோம். புதுமுகத்திற்கு வாய்ப்புள்ளது. எங்களுடைய எம்பி ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிட போவதில்லை என்று சொல்லியிருக்கிறார். அதனால், அதற்கான வாய்ப்பு இருக்க தானே செய்யும். செயற்குழு தான் முடிவு எடுக்கும்’’ என்றார்.

The post திமுக உடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம், கொமதேகவுக்கு நாமக்கல் appeared first on Dinakaran.

Tags : DMK ,Ramanathapuram ,Indian Union Muslim League ,Namakkal ,Komatheka ,CHENNAI ,Union Muslim League of India ,Kongunadu People's National Party ,Treasurer ,DR ,Balu ,Ministers ,KN Nehru ,I. Periyasamy ,MRK ,Panneer Selvam ,Deputy General Secretaries ,Ponmudi ,A. Raza ,Policy Propagation ,Komadega ,Dinakaran ,
× RELATED அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி...