×

பாமக, தேமுதிக, தமாகாவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை: இறுதி கட்டத்தை எட்டியது

தமிழக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் பாமக எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்களுக்கு முன்னர் ராமதாசுடன் சி.வி.சண்முகம் ரகசிய பேச்சுவார்த்தை இரண்டாவது முறையாக நடத்தினார். அதேநேரத்தில் தேமுதிக, தமாகாவுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக, பாஜ கூட்டணி உடைந்துள்ளதால், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாசை, சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துப் பேசினார். அப்போது 9 மக்களவை தொகுதியும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் வேண்டும் என்று ராமதாஸ் கூறியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு முன்னர் ராமதாசை, சி.வி.சண்முகம் மீண்டும் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது 9 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி, தேர்தல் செலவுக்கு கூடுதலாக 30 ஸ்வீட் பாக்ஸ் வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதிமுக தரப்பில் 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை மற்றும் 70 ஸ்வீட் பாக்ஸ் தர ஒப்புக் கொண்டதாக சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இதனால் மீண்டும் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் நேற்று அதிமுகவின் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள வீட்டில் சந்தித்துப் பேசினர். ராமதாஸ் கூறிய ரகசிய தகவல்களை இருவரும் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. பாமகவை பொறுத்தவரை ராமதாஸ், ஜி.கே.மணி, 5 எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் அன்புமணியிடம் அண்ணாமலை பேசியுள்ளார். அப்போது அன்புமணிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி, 2 ராஜ்யசபா சீட், 10 மக்களவை தொகுதிகள் தருவதாக கூறியுள்ளார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சர் பதவியை தருவதாக கூறிய பாஜ இதுவரை தரவில்லை. இனிமேல் எப்படி தருவார்கள். அவர்களை நம்பினால், நாம் கைவிடப்படுவோம். அதேநேரத்தில் வாக்குறுதி கொடுக்கும் அண்ணாமலைக்கே, இந்த தேர்தலில் தோல்வி வந்தால் மாற்றப்படுவார். அவரது வாக்குறுதியை எப்படி நம்புவது என்று ராமதாஸ் கூறியுள்ளார். ஆனால் அன்புமணியோ, பாஜவுடன் கூட்டணி சேர விரும்புகிறார்.

மோடி உறுதி தந்தால் சேருகிறேன் என்று அன்புமணி கூறி வருகிறார். இதனால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. பேசாமல் அதிமுக கொடுக்கும் 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை மற்றும் 70 ஸ்வீட் பாக்சுக்கு பதில் 100 ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக் கொண்டு அந்த கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்று ராமதாஸ் கூறி வருவதாக கூறப்படுகிறது. அதேபோலத்தான் தேமுதிக 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் கேட்பதாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் 5 சீட் தருகிறோம். ஸ்வீட் பாக்ஸ் தருகிறோம். ஆனால் மாநிலங்களவை சீட் தர முடியாது என்று கூறிவிட்டனர். தமாகாவுக்கு ஒரு சீட் தருவதாகவும், அதுவும் பாஜ சின்னத்தில் நிற்கவேண்டும். வெற்றி பெற்றால் ஒன்றிய அமைச்சர் உறுதி என்று பாஜக மேலிடம் கூறியுள்ளது. ஆனால் அதிமுகதான் மாநிலங்களவை சீட் கொடுத்தது. 2 ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. இதனால் பேசாமல் அதிமுகவுடன் கூட்டணி சேரலாம் என்று தமாக நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் வாசனோ, ஒன்றிய அமைச்சர் பதவி கிடைப்பதால் பேசாமல் பாஜவுடன் செல்லலாமா என்று ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சர் பதவி தரவில்லை. அதிமுகதான் எம்பி பதவி கொடுத்தது. சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. ஏற்கனவே நீங்கள் எடுத்த தவறான முடிவால், பல தலைவர்கள் சென்று விட்டனர்.

இப்போது இருக்கும் தொண்டர்களையும் விட்டு விட வேண்டாம் என்று நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனாலும் அவர் ஊசலாட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், தற்போது பாஜவுடன் ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, தமமுக ஆகிய கட்சிகள் மட்டுமே ஒரு சீட் வாங்கிக் கொண்டு பாஜ சின்னத்தில் போட்டியிட தயாராக உள்ளன. மேலும், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனும் பாஜ கூட்டணியில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும், அவர்களுக்கான தொகுதிகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதற்கு காரணம், பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளின் முடிவுகள் தெரிந்த பிறகு பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் பேசலாம் என்று அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது பாஜ. இதனால், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதுவும் பாஜவுடன் போட்டியிட தயக்கம் காட்டி வருவதால் பாஜக தலைவர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

The post பாமக, தேமுதிக, தமாகாவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை: இறுதி கட்டத்தை எட்டியது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BAM ,DMD ,TAMAKA ,Tamil ,Nadu ,Edappadi Palaniswami ,CV ,Shanmugam ,Rama Das ,BAMA ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...