×

கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் கையை அறுத்து குடும்பத்தினருடன் தர்ணா

நெல்லை : தொடர் மிரட்டல் விடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் கையை அறுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டார். நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி பாண்டியன் மகன் ரகு (35). இவர், இதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவில் டவுன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், சாலியர் தெருவில் ரோந்து சென்றனர். அப்போது குடிபோதையில் நின்றிருந்த 6 பேர் கும்பலிடம் பெயர், முகவரியை கேட்டுள்ளனர். அவர்கள் தெரிவிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அங்கு வந்த ராமமூர்த்தி, ரகு ஆகியோர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களின் பெயர், முகவரியை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக அக்கும்பல், ராமமூர்த்தி மற்றும் ரகுவை அரிவாளை காட்டி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் நின்றிருந்த தந்தை, மகனை கும்பல் தாக்க முயன்று மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனை கண்டித்து நேற்றிரவு நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ரகு மற்றும் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரகு தனது இடது கையை கத்தியால் அறுத்துக் கொண்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடமிருந்து கத்தியை பறித்தனர். தகவலறிந்து வந்த பாளை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் முத்துராஜ், எஸ்ஐ ஜெபராஜ் ஆகியோர் ரகு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்தனர். இதையேற்று தர்ணா போராட்டத்தை கைவிட்டு டவுன் காவல் நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
நேற்று இரவு மிரட்டல் விடுத்த கும்பல் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் கையை அறுத்து குடும்பத்தினருடன் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Nellai ,Ramamurthy Pandian ,Raghu ,Salier Street, Nellai Town ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...