×

நெல்லையில் 2வது நாளாக வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்

*தாலுகா, ஆர்டிஓ அலுவலக பணிகள் பாதிப்பு

நெல்லை : பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் நேற்று 2வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாலுகா, ஆர்டிஓ அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அலுவலர் அல்லாத அலுவலர்கள் பணி இறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும்.

இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் அலுவலர் (கிரேடு) பெயர் மாற்ற அரசாணை அடிப்படையில் விதித்திருந்த ஆணையை உடனே வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் துறை மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோர் இடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய மனிதவள மேலாண்மை துறை மூலம் உரிய தெளிவுரை வழங்க வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகாக்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்காக துணை தாசில்தார் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். மக்களவை தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள உடனே முழுமையான நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர் 3 கட்ட போராட்டம் அறிவித்தனர். முதற்கட்டமாக கடந்த 13ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 2ம் கட்டமாக நேற்று முன்தினம் (பிப்.22) காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மத்திய செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முருகேஸ்வரி போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட மகளிரணி துணை அமைப்புக்குழு ஜாக்குலின் செல்வராணி, பாளை. வட்ட செயலாளர் ஆறுமுககுமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார்கள் வரை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தின் பல பிரிவுகள் காலியாக கிடந்தன. அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

இதுபோல் நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி சப்- கலெக்டர் அலுவலகம், நெல்லை ஆர்டிஓ அலுவலகம் மற்றும் 8 தாலுகா அலுவலகங்களிலும் வருவாய்த் துறை அலுவலர்கள், 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வருவாய்த்துறை அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. வரும் பிப்.26ம் தேதி வரை இந்த போராட்டம் தொடர்கிறது.
3வது கட்டமாக வரும் பிப்.27ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

The post நெல்லையில் 2வது நாளாக வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nella ,Taluka ,RTO ,Taluk ,Sub ,Tahsildar ,Revenue ,Dinakaran ,
× RELATED இந்திய அளவில் 576வது இடம் பிடித்து...