×

தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றம்‌ சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி

*சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம்

ஊட்டி : தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றம்‌ சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு மாதம் தோறும்‌ ரூ.3000 நிதியுதவி வழங்கப்படுகிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னின்டு தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றம்‌ சார்பில் ஊட்டியில் கலை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். ஊட்டி கோட்டாட்சியர் மகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார், ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாயன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்துக் கொண்டு பழங்குடியினர் மற்றும் கலைஞர்களை பாராட்டு பரிசு வழங்கினார். அதன்பின், அவர் பேசியதாவது:தமிழக அரசால்‌ 1955ம்‌ ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்‌ என்ற அமைப்பாகும். இயல்‌ தமிழ்‌, இசைத்தமிழ்‌, நாடகத்‌ தமிழ்‌ என்ற முத்தமிழுக்கும்‌ பெருமை சேர்க்கும்‌ விதத்தில்‌, 1973ம்‌ ஆண்டில்‌ முத்தமிழறிஞர்‌ டாக்டர்‌ கலைஞரால் தமிழ்நாடு இயல்‌, இசை, நாடக மன்றம்‌ எனப்‌ பெயர்‌ சூட்டப்பட்டது.

கலை பண்பாட்டுத்‌ துறையின்‌ ஓர்‌ அங்கமாகத்‌ திகழும்‌, தமிழ்நாடு இயல்‌, இசை, நாடக மன்றம்‌ தமிழ்நாடு அரசால்‌ வழங்கப்படும்‌ நிதியுதவியின்‌ மூலம்‌ தொன்மையான கலைகளை வளர்த்தல்‌, அக்கலைகளில்‌ ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல்‌, அழிந்து வரும்‌ கலை வடிவங்களை ஆவணமாக்குதல்‌, நாடகம்‌, நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர்‌ அளித்தல்‌, தமிழக பாரம்பரியக்‌ கலைகளை வெளி மாநிலங்களிலும்‌, உலகளவிலும்‌ எடுத்துச்‌ செல்லுதல்‌ மற்றும்‌ தமிழ்கலைகளின்‌ வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு செய்யும்‌ கலைஞர்களுக்கு விருதுகள்‌ வழங்குதல்‌ மற்றும்‌ நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல்‌ ஆகிய பணிகளை தமிழ்நாடு இயல்‌, இசை, நாடக மன்றம்‌ மேற்கொண்டு வருகிறது.

முத்தமிழறிஞர்‌ டாக்டர்‌ கலைஞர்‌, தமிழ்நாடு இயல்‌, இசை, நாடக மன்றத்தை பொது (பண்பாட்டு) துறையின்‌ கீழ்‌ கொண்டு வந்தார். தனது நேரடி வழிகாட்டுதலின்‌ படி பல்வேறு கலை திட்டப்‌ பணிகள்‌ மற்றும்‌ கலைஞர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கிக்‌ கொடுத்தார். இந்த மன்றம் மூலம் நலிந்த நிலையில்‌ வாழும்‌ கலைஞர்களுக்கு மாதம் தோறும்‌ நிதியுதவி ரூ.3000 தொகை வழங்கப்படுகிறது.

பல்வேறு கலை நிறுவனங்களின்‌ மூலம்‌ கலை நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பளித்து அதன்‌ மூலம்‌ திறமைமிக்க 16 வயது முதல்‌ 30 வயது வரையிலான இளம்கலைஞர்களுக்கு ஆதரவும்‌ ஊக்கமும்‌ அளித்தல்‌, மேலும்‌ இத்திட்டத்தில்‌ கடந்த ஆண்டுகளிலிருந்து 18 வயது முதல்‌ 32 வயது வரையிலான கிராமிய கலைஞர்களும்‌ பயன்பெற்று வருகின்றனர்‌. கலைத்துறையில்‌ பல்வேறு கலைப்பிரிவுகளின்‌ மேம்பட்ட வளர்ச்சிக்குச்‌ சேவை செய்த புகழ்மிக்ககலைஞர்களுக்கு “கலைமாமணி”விருதுகள்‌ வழங்கப்படுகிறது.

“பாரதி”, “எம்‌.எஸ்‌.சுப்புலட்சுமி”, “பாலசரசுவதி” ஆகியோர்‌ பெயரில்‌ அகில இந்திய அளவிளான விருதுகள்‌ வழங்கிச்‌ சிறப்பு செய்யப்படுகிறது. கலை மேதைகளின்‌ நினைவு விழாக்களை நடத்தும்‌ தன்னார்வக்‌ கலை நிறுவனங்களை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ நிதியுதவி வழங்கப்படுகிறது. இயல்‌, இசை, நாடக, நாட்டியம்‌ மற்றும்‌ கிராமியக்‌ கலைஞர்கள்‌ பயன்பெறும்‌ நோக்கில்‌ கலைவிழாக்கள்‌ நடத்தப்படுகிறது. அயல்‌ நாடுகளில்‌ தமிழகக்‌ கலைகளைக்‌ கொண்டு செல்லப்படுகிறது.

பொங்கல்‌ கலை விழாவினை முன்னிட்டு “இசைச்‌ சங்கமம்‌” மற்றும்‌ “கலைச்‌ சங்கமம்‌” கலை நிகழ்ச்சிகள்‌ நடத்தப்படுகிறது. கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வரலாற்று நாடக விழா, நாட்டிய விழா, கிராமியக்‌ கலை விழா, பழங்குடியின்‌ கலை விழா மற்றும்‌ கலைத்‌ திருவிழாக்கள்‌ நடத்துதல்‌ போன்ற சீர்மிகு கலைப்பணிகளை மன்றம்‌ செயற்படுத்தி வருகிறது.
கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழர்‌ திருநாளாம்‌ பொங்கல்‌ விழாவினை 35 மாவட்டங்களில்‌ கொண்டாடும்‌ வண்ணம்‌, தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 35 மாவட்டங்களில்‌ நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு, 16.02.2024 முதல்‌ 23.02.2024 வரை கிராமியக்‌ கலை நிகழ்ச்சிகள்‌ “கலைச்‌ சங்கமம்‌” விழாவாக நடத்தப்பட்டது.

இதன்‌ ஒரு பகுதியாகவே ஊட்டியில்‌, பழங்குடியினர்‌ பண்பாட்டு மைய அரங்கத்தில்‌ பழங்குடியினர்‌ மற்றும்‌ கிராமியக்‌ கலை நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர்‌, தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றத்திற்கு வழங்கப்பட்ட வந்த நிதி ஒதுக்கீட்டினை ரூ.3 கோடியாக உயர்த்தி வழங்கியதுடன்‌ கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பொற்கிழித் தொகையினை ரூ.50 ஆயிரத்தில்‌ இருந்து ரூ.1 லட்சமாகவும்‌ கலை பரிமாற்றத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தமிழகக்‌ கலைக்‌ குழுக்களை அயல்‌ மாநிலங்களுக்கு அனுப்பிட வழங்கப்பட்டு வந்த நிதியினை ரூ.15 லட்சத்திலிருந்து 50 லட்சம்‌ ஆக உயர்த்தி வழங்கியுள்ளார்.

கிராமியக்‌ கலைஞர்களுக்கு இசைக்கருவிகள்‌, ஆடை அணிகலன்கள்‌ மற்றம்‌ கலைப்‌ பொருட்கள்‌ வாங்கிட வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்திட ஆண்டுதோறும்‌ 500 கலைஞர்களுக்கு வழங்கிடவும்‌ உத்திரவிட்டுள்ளார்‌. முத்தமிழறிஞர்‌ டாக்டர்‌ கலைஞர் தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றம்‌ எனப்‌பெயர்‌ சூட்டப்பட்டு 50 ஆண்டுகள்‌ நிறைவு பெற்றதை முன்னிட்டு பொன் விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் தலைமையில்‌ தமிழ்நாட்டின்‌ 50 பாரம்பரியக்‌ கலை வடிவங்களில்‌ ஒவ்வொரு கலைப்‌ பிரிவிற்கும்‌ 50 கலைஞர்கள்‌ என 2500 கலைஞர்கள்‌ பங்குபெற்று வழங்கும்‌ கலை நிகழ்ச்சிகள்‌, தமிழகக்‌ கலை வரலாற்றில்‌ குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையும்‌.இவ்வாறு அவர் பேசினார். விழாவில், முன்னாள் வேளாண் விற்பனை குழு தலைவர் இளங்கோ, நாவா அறக்கட்டளை தலைவர் ஆல்வாஸ், பழங்குடியின மக்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

The post தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றம்‌ சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Natural Music and Theater Council ,Tourism Minister ,Perumitham Ooty ,Minister ,Tourism ,Ramachandran ,Tamil Nadu Natural Music and Drama Society ,Tamil Nadu ,Tamil Nadu Classical Music Theater Forum ,
× RELATED நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்