×

முதல்வர் ரங்கசாமியுடன் நிர்மல்குமார் சுரானா சந்திப்பு பாஜ ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளராக 5 பேர் தேர்வு

புதுச்சேரி, பிப். 24: பிரதமர் மோடி அடுத்தவாரம் தமிழகம் வரவுள்ள நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பாஜக மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேஜ கூட்டணி வேட்பாளர் இறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் பாஜக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதுகுறித்து கூட்டணியின் மாநில தலைவரும், முதல்வருமான ரங்கசாமியை, ஏற்கனவே அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசித்தனர். அப்போது வெற்றி வேட்பாளரை தேர்வு செய்யுமாறு ரங்கசாமி அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதன்படி, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை வேட்பாளராக நிறுத்த கட்சி மேலிடம் ஆர்வம் காட்டியது. ஆனால் அவர் மறுத்துவரும் நிலையில் கவர்னர் தமிழிசை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரது பெயர்கள் தொடர்ந்து அடிபடுகிறது. இதனிடையே பிரதமர் மோடி வருகிற 28ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி தொகுதிக்கான பாஜக வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலை பிரதமரிடம் ஒப்படைக்க பாஜக மேலிட பொறுப்பாளர்கள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, திலாசுபேட்டையில் உள்ள அவரது வீட்டில் பாஜக மேலிட பார்வையாளரான நிர்மல்குமார் சுரானா நேற்று திடீரென சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்பின்போது புதுச்சேரியில் தேஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது குறித்து ரங்கசாமியிடம் பேசியுள்ளனர். அப்போது பாஜ நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய பின் முடிவு செய்யலாம் எனக்கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது சபாநாயகர் செல்வம் உடனிருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் செல்வகணபதி பங்கேற்கவில்லை. திலாசுபேட்டையில் முதல்வரை சந்திக்க வந்த பாஜக மேலிட பொறுப்பாளரை கதிர்காமம் தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ கேஎஸ்பி ரமேஷ் வரவேற்று, வழியனுப்பி வைத்தார்.

இதனை தொடர்ந்து பாஜ மாநில தலைவர் செல்வகணபதி எம்பி தலைமையில் புதுவை, உழவர்கரை, காரைக்கால், மகே, ஏனாம் ஆகிய பகுதிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் பாஜக மேலிட பார்வையாளர் சுரானா கலந்து கொண்டார். அப்போது நாடாளுமன்ற பாஜ வேட்பாளர் தேர்வு மற்றும் இதில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இரண்டு கூட்டத்தின் ஆலோசனைக்குப் பிறகு 5 பேரை வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டது.

இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி கூறுகையில், பாஜ மேலிட பார்வையாளர் சுரானா தலைமையில் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட 5 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் போட்டியிட 5 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது. முதலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இரண்டாவதாக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், மூன்றாவதாக சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கரன், நான்காவதாக அமைச்சர் சாய் ஜெ.சரவணன், ஜந்தாவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பெயர்கள் முடிவு செய்யப்பட்டது.

வன்னியர் அடிப்படையில் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம், ரெட்டியார் சமூகத்தில் சிவசங்கரன், பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர் சாய்.ஜெ.சரவணன், உயர் வகுப்பை சேர்ந்த நிர்மலா சீதாராமன் ஆகிய ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு சுரானா அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் ரங்கசாமியுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க தீர்மானம் செய்யப்பட்டது.

The post முதல்வர் ரங்கசாமியுடன் நிர்மல்குமார் சுரானா சந்திப்பு பாஜ ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளராக 5 பேர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Nirmal Kumar Surana ,Chief Minister ,Rangasamy ,BJP ,Puducherry ,Modi ,Tamil Nadu ,Teja Alliance ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...