×

தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 601 பேருக்கு ரூ.16.31 கோடி ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தேசிய, சர்வதேச மற்றும் கேலோ இந்தியோ இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் 601 பேருக்கு ரூ.16 கோடியே, 31 லட்சம் உயரிய ஊக்கத்தொகையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த விழாவில், 37வது தேசிய விளையாட்டுப் போட்டி (கோவா), கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி (தமிழ்நாடு), ஜெர்மனியில் நடந்த உயரம் குறைந்தவர்களுக்கான போட்டி, உலக திறன் விளையாட்டுப் போட்டி (தாய்லாந்து), மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா போட்டி (டெல்லி), தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ், நீச்சல், ரோலர் ஸ்கேட்டிங், ஆசிய சைக்கிள் போட்டி ஆகியவற்றில் பதக்கம் வென்ற 601 பேருக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மொத்தம் ரூ.16 கோடியே 31 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, விளையாட்டுத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, ஆணையர் ஜெகந்நாதன், எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தேசிய சைக்கிளிங் வீராங்கனை தமிழரசி, பாரா தடகள வீராங்கனை கீர்த்திகா, பில்லியர்ட்ஸ் வீரர் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

* விழாவில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி மூலமாகவே விழா மேடைக்கு வரும் வகையில் வசதி செய்யப்பட்டு இருந்தது. பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

* நிகழ்ச்சியில் வீரர்கள், வீராங்னைகள் 601 பேருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலைகளை வழங்கினார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நின்றபடியே இருந்தார்.

* வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நேற்றைய நிகழ்ச்சியில் 4 பேருக்கு அரசு பணி ஆணை வழங்கப்பட்டது. ரங்கநாயகி (கால்பந்து), சங்கீதா (சக்கர நாற்காலி வாள் வீச்சு), அகல்யா, வெர்ஜின் (வூசு விளையாட்டு) ஆகியோருக்கு பத்திரபதிவுத் துறையில் இளநிலை உதவியாளராக பணி ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

 

The post தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 601 பேருக்கு ரூ.16.31 கோடி ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Minister of Youth Welfare and Sports Development ,National, ,International ,Gallo Indian Youth Games ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...