போபால்: மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பா.ஜ பிரமாண்ட வெற்றியை பெற்றது. இதனால் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மீது காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்தது. அவரது பதவி பறிக்கப்பட்டு, புதிய மாநில தலைவராக ஜித்து பட்வாரி நியமிக்கப்பட்டார். மேலும் மாநிலங்களவை தேர்தலில் கமல்நாத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கமல்நாத் அதிருப்தி அடைந்து பா.ஜவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியானது. அவரது மகன் நகுல்நாத்தின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் தொடர்பான அத்தனை வாசகங்களும் நீக்கப்பட்டதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எங்கள் தலைவர் ராகுல் என்று கமல்நாத் நேற்று டிவிட்டர் பதிவில் வெளியிட்டு அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்திய ஒற்றுமை நீதியாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, மார்ச் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மத்தியபிரதேச மாநிலத்தில் யாத்திரை மேற்கொள்கிறார். அவரை வரவேற்றும், அவரது யாத்திரையில் திரளான மக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தும் கமல்நாத் அந்த பதிவில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,’ எங்கள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் தெருக்களில் இறங்கி அநீதி, அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக தீர்க்கமான போராட்டத்தை அறிவித்துள்ளார். இந்த யாத்திரையில் அதிகபட்ச எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்துகொள்வதன் மூலம் ராகுல் காந்திக்கு பலமாகவும் தைரியமாகவும் இருக்கும்படி மத்தியப் பிரதேச மக்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தொண்டர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் நானும் சேர்ந்து அநீதியை முடிவுக்கு கொண்டுவர இந்த மாபெரும் பிரசாரத்தில் பங்கேற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post பா.ஜ பக்கம் போகல…எங்கள் தலைவர் ராகுல்: கமல்நாத் டிவிட்டால் முடிவுக்கு வந்த சர்ச்சை appeared first on Dinakaran.