×

சொத்து குவிப்பு வழக்கு சார்பதிவாளர், வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு

அம்பை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சார்பதிவாளர் வீட்டிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது மகள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், பண்ணை சங்கரய்யா நகரைச் சேர்ந்த முருகன் மனைவி வேலம்மாள் (55). இவர் வி.கே.புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக உள்ளார். அந்த அலுவலகத்தில் இவர் பொறுப்பு சார் பதிவாளராக 2 வருடங்களாக பொறுப்பில் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக புகார் எழுந்தது.

குறிப்பாக 2014-2021ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.45 லட்சத்து 90 ஆயிரம் சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் நெல்லை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று காலை 6 மணிக்கு அம்பையில் உள்ள வேலம்மாள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்த பணம், நகைகள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து பத்திரங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். இந்தசோதனை, மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் பல முக்கிய சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், நாகர்கோவில் அருகே உள்ள மருங்கூர் பகுதியில் வேலம்மாளின் மகள் கிருஷ்ணவேணியின் வீட்டிலும் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 7 முதல் மாலை வரை சோதனை நடத்தினர். அப்போது வங்கி பண பரிவர்த்தனைகள் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

The post சொத்து குவிப்பு வழக்கு சார்பதிவாளர், வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Ambai ,-corruption ,Kanyakumari district ,Nellai district ,Ambasamudram ,Sankaraiya ,Dinakaran ,
× RELATED அம்பையில் போதையில் ரகளை செய்தவர்கள் மீது வழக்கு