×

10 லட்சம் மாணவர்களுக்காக படிக்கும் பள்ளிகளிலேயே ஆதார் பெறும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோவை: தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், “படிக்கும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” என்று மாணவர்களுக்கான புதிய திட்டம் துவக்க விழா கோவை காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணத்தை “நேரடி பயனாளர் பரிமாற்றம்” (DBT) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திட வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதற்கு மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் அவசியமாகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஆதார் எண்ணுடன் கூடிய அட்டையை பயன்படுத்த ஏதுவாக, இப்புதிய பதிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் புதுப்பித்தல் செய்துகொள்வதற்கு பள்ளி கல்வித்துறை ஒரு சிறப்பான வசதியினை செய்துள்ளது. 2024-2025-ம் ஆண்டில் 1-ம் வகுப்பில் புதிதாக சேரவிருக்கும் 5 வயது பூர்த்தியடைந்த ஏறக்குறைய 8 லட்சம் மாணவர்களுக்கும் தற்போது 10ம் வகுப்பு பயின்று எதிர்வரும் கல்வியாண்டில் 11ம் வகுப்பில் சேரவிருக்கும் 15 வயது பூர்த்தியடைந்த 9,94,297 மாணவர்களுக்கும் இத்திட்டம் மூலம் ஆதார் அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

* நன்கொடை வழங்கியவர்கள் மகிழ்ச்சி அடைவது எங்களை ஊக்கப்படுத்துகிறது

கோவை பீளமேட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், ‘அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் தரப்பில் நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது. மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் பள்ளிக்கு நன்கொடை கொடுத்ததை போல் நிறைய பேர் வழங்கி உள்ளனர். நன்கொடை கொடுத்தவர்களை அழைத்து கவுரவிப்பதன் வாயிலாக அவர்கள் மகிழ்ச்சி அடைவது எங்களை ஊக்கப்படுத்துகிறது’ என்றார்.

The post 10 லட்சம் மாணவர்களுக்காக படிக்கும் பள்ளிகளிலேயே ஆதார் பெறும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamil Nadu Government School Education Department ,Government Higher ,Secondary ,School ,Kalapatti, Coimbatore ,Minister ,Anbil Mahesh ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...