×
Saravana Stores

இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளை மீட்டுவர தமிழக குழுவுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

சென்னை: தமிழக மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை சிறையில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 49 தமிழக மீனவர்களும், 151 மீன்பிடி படகுகளும் உள்ளன. சிறை பிடிக்கப்பட்ட 151 படகுகளில் 12 படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளது. இதில் மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளையும் மீட்டு தமிழகம் கொண்டுவர முதல்வர் கடந்த அக்டோபர் 2023 அன்றே நிதி ஒதுக்கி மீட்புக்குழு அமைத்து உத்தரவிட்டார். ஆனாலும், ஒன்றிய அரசானது தமிழ்நாட்டின் மீட்புக்குழு இலங்கைக்கு சென்று விடுதலை செய்யப்பட்ட படகுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனுமதியை இன்றுவரை வழங்கவில்லை.

அதேபோல, தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடேயேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்பொருட்டு நடத்தப்படும் இந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டம் 25.03.2022க்கு பின்னர் இதுவரை நடைபெறவில்லை. அரசியல் காரணங்களுக்காக மீனவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அவ்வப்போது ராமேஸ்வரம் பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்டுத்தருவோம் என்று வாக்குறுதி தருவதும், பாரதிய ஜனதா கட்சியினர் மீனவ பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க வைப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், சிறைபிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள படகுகளை மீட்பதற்கு எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் ஒன்றிய அரசால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 152 மீன்பிடி படகுகளுக்கு ரூ.6.84 கோடி நிவாரணமாக வழங்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளார். எனவே, தமிழ்நாட்டு மீனவர்களின் மேல் அக்கறை இல்லாத ஒன்றிய அரசு மேலும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிப்பதற்கும் மீட்புக்குழு இலங்கை செல்ல உடனடியாக அனுமதியும் வழங்க வேண்டும். இந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தையும் உடனடியாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளை மீட்டுவர தமிழக குழுவுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil ,Nadu ,Minister ,Anitha Radhakrishnan ,Chennai ,Tamil Nadu Fisheries - Fishermen's Welfare and Animal Husbandry Department ,Anita R. Radhakrishnan ,Tamil Nadu ,Sri Lankan government ,
× RELATED 3% அகவிலைப்படி அறிவிப்பு முதல்வரை...