×

ரூ.294.83 கோடியில் 35 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளில் 1,674 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நிர்வாக அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் 1,674 புதிய மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ரூ.294.83 கோடி மதிப்பீட்டில் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
1. ஊரக குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கி, அதன்மூலம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்குவது ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் மக்கள் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுவது உயிர் நீர் இயக்கத்தின் நோக்கமாகும்.
2. தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் உள்ள 125.28 லட்சம் வீடுகளில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 99 லட்சம் வீடுகளுக்கு (79.03%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் 5,578 கிராம ஊராட்சிகளுக்கு 100% குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
3. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100% குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்கள் வீடுதோறும் குடிநீர் வழங்கும் மாவட்டங்கள் என சான்றளிக்கப்பட்டுள்ளன.
4. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 45 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் உள்ள 56 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் நீடித்த நிலைத் தன்மையுடைய நீராதாரத்தை கொண்டுள்ள கிராமங்களில் ஒற்றை கிராமத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ரூ.18,228.38 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
5. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் மக்கள் நிதி பங்களிப்புடன் ரூ.294,83 கோடி மதிப்பீட்டில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் 35 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கிட 1,674 புதிய மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்திட நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார். இதன்மூலம் ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் அரசின் நோக்கத்தை அடைவதில் இத்திட்டமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ரூ.294.83 கோடியில் 35 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளில் 1,674 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நிர்வாக அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...