×

ராஞ்சி டெஸ்டில் ஜோ ரூட் அபார சதம்: சரிவிலிருந்து மீண்டது இங்கிலாந்து; அறிமுக வேகம் ஆகாஷ் அசத்தல்

ராஞ்சி: இந்திய அணியுடனான 4வது டெஸ்டில், ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் (27 வயது, பீகார்) அறிமுகமானார். ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். டக்கெட் 11, ஆலிவர் போப் 0, கிராவ்லி 42 ரன் எடுத்து ஆகாஷ் தீப் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து 57 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஜோ ரூட் – ஜானி பேர்ஸ்டோ இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. பேர்ஸ்டோ 38 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன் மட்டுமே எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆக, இங்கிலாந்து 24.1 ஓவரில் 112 ரன்னுக்கு 5 விக்கெட் என மீண்டும் சரிவை சந்தித்தது.

எனினும், ஜோ ரூட் – பென் ஃபோக்ஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 113 ரன் சேர்க்க, இங்கிலாந்து கவுரவமான ஸ்கோரை எட்டியது. ஃபோக்ஸ் 47 ரன் (126 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), டாம் ஹார்ட்லி 13 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஓல்லி ராபின்சன் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஜோ ரூட் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 31வது சதமாகும். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்துள்ளது. ஜோ ரூட் 106 ரன் (226 பந்து, 9 பவுண்டரி), ராபின்சன் 31 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2, அஷ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்
ஜாக் கிராவ்லி (பி) ஆகாஷ் தீப் 42
பென் டக்கெட் (சி) ஜுரெல் (பி) ஆகாஷ் தீப் 11
ஆலிவர் போப் எல்பிடபுள்யு (பி) ஆகாஷ் தீப் 0
ஜோ ரூட் (ஆட்டமிழக்கவில்லை) 106
ஜானி பேர்ஸ்டோ எல்பிடபுள்யு (பி) அஷ்வின் 38
பென் ஸ்டோக்ஸ் எல்பிடபுள்யு (பி) ஜடேஜா 3
பென் ஃபோக்ஸ் (சி) ஜடேஜா (பி) சிராஜ் 47
டாம் ஹார்ட்லி (பி) சிராஜ் 13
ஆலிவர் ராபின்சன் (ஆட்டமிழக்கவில்லை) 31
உதிரிகள் 11
மொத்தம் (90 ஓவர், 7 விக்கெட்) 302
விக்கெட் வீழ்ச்சி: 1-47, 2-47, 3-57, 4-109, 5-112, 6-225, 7-245.
இந்தியா பந்துவீச்சு: சிராஜ் 13-3-60-2, ஆகாஷ் தீப் 17-0-70-3, ஜடேஜா 27-7-55-1, அஷ்வின் 22-1-83-1, குல்தீப் 10-3-21-0, ஜெய்ஸ்வால் 1-0-6-0.

The post ராஞ்சி டெஸ்டில் ஜோ ரூட் அபார சதம்: சரிவிலிருந்து மீண்டது இங்கிலாந்து; அறிமுக வேகம் ஆகாஷ் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Joe Root ,Ranchi Test ,England ,Akash ,Ranchi ,India ,Jharkhand State Cricket Association Stadium ,Akash Asatal ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை