×

வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாக ரூ.69.55 லட்சம் மோசடி: ஒருவர் கைது

ஆவடி: வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாக ரூ.69,55,600 மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் கடந்த 13ம் தேதி கொடுத்த புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: என்னிடம் சோளிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த காசலி(64) என்பவர் தான் வருமான வரி கட்டி வருவதால் எனக்கு எளிதில் கடன் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை கூறினார்.

வாங்கும் கடனை 50:50 பிரித்துக் கொண்டு அதற்குண்டான கடன் மற்றும் அசலை அவரவர் கட்டிக்கொள்வது என ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதன் அடிப்படையில் கடந்த 2014ம் ஆண்டு என் தாயார் அமீரூனிசா என்பவரது சொத்தான எண். 16. பூந்தமல்லி 2வது தெரு பி.ஜி.பி. நகரில் உள்ள 2,604 சதுரடி கொண்ட வீடு மற்றும் இடத்தை 21.04.2014ம் தேதி காசலியின் பெயருக்கு பவர் எழுதி கொடுத்தோம். பிறகு கசாலி பெயரில் வங்கியில் மேற்படி சொத்தை அடமானமாக வைத்து 2014ம் ஆண்டு ரூ.1 கோடியே 20 லட்சம் பணம் கடன் பெற்றார்.

மேற்படி 50% என பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னதை மீறி கசாலி ரூ.70 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டார். எனக்கு 50 லட்சம் மட்டுமே கொடுத்தார் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடனை பெற்றுக் கொண்ட கசாலி கடனை கட்டாமல் வீட்டை அடிக்கடி மாற்றியும் இருந்து வந்துள்ளார். நான் பெற்ற கடன் தொகைக்கு மாதம் தவறாமல் வட்டி பணத்தை கசாலியிடம் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த வட்டியைக்கூட கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

கடன் தொகையை செலுத்தாததால் வீட்டை ஏலம் விடுவதாக வங்கியில் இருந்து நோட்டிஸ் அனுப்பி உள்ளார். சொத்தை ஏலத்தில் விடாமல் இருக்க வேண்டி வட்டியை நான் வங்கியில் நேரடியாக கட்டினேன். எனது வீட்டை அடமானம் வைத்து என்னை ஏமாற்றிய கசாலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு வரவேண்டிய மொத்த பணம் ரூ.69,55,600த்தை திரும்ப பெற்றுத் தரவேண்டும். என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையில் கசாலி ரூ.69,55,600த்தை ஏமாற்றி மோசடி செய்திருப்பது உறுதியானது. அதன் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் பெருமாள், உதவி ஆணையர் பொன் சங்கர் தலைமையில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராமசுந்தரம் நேற்று முன்தினம் காசலியை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாக ரூ.69.55 லட்சம் மோசடி: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Mohammad Ismail ,Ambattur ,Branch ,Avadi Police ,
× RELATED வீட்டு உரிமையாளர் மீது வழக்கு