பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்த்தி வழங்க வலியுறுத்தி 13 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசைத்தறி நெசவாளர்கள் – உரிமையாளர்கள் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது, இதனால் சோகத்துடண் வீடு திரும்பிய நெசவாளர்கள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் குவிந்தனர். பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பேருந்து நிலையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து நள்ளிரவு 12 மணிக்கு பொதட்டூர்பேட்டைக்கு வந்த கோட்டாட்சியர் தீபா நெசவாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தையில், மீட்டர் ஒன்றுக்கு ரூ.6 கூலி உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இருப்பினும் விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் ரூ.3 உயர்த்தித் தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுக்கு வராத நிலையில் கோட்டாட்சியர் திரும்பிச் சென்றார். இதனை அடுத்து அதிகாலை 3 மணிக்கு நெசவாளர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
* கோட்டாசியர் மீது கோப்புகள் வீச்சு தொழிற்சங்க நிர்வாகி மீது வழக்கு பதிவு
திருத்தணியில் வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் நெசவாளர் – உரிமையாளர்கள் இடையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் போது அவேசமடைந்த அண்ணா நெசவாளர் தொழிற்சங்க நிர்வாகி விஜயன், கையில் வைத்திருந்த கோப்புகளை தூக்கி கோட்டாட்சியர் தீபா மீது வீசியதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கூட்டத்திலிருந்து அவரை வெளியேற்ற கோட்டாட்சியர் தீபா உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக திருத்தணி வட்டாட்சியர் மதன் புகாரின் பேரில் திருத்தணி போலீசார் விஜயன் மீது கோட்டாட்சியர் மீது கோப்புகள் வீசியது, பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் நெசவாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.