×

நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ரூ.640 கோடியில் பயோ மைனிங் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

திருவொற்றியூர்: கொடுங்கையூர் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் ரூ.640 கோடி மதிப்பீட்டில் குப்பைகளை அழிக்கும் பயோ மைனிங் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில் குப்பைகளை அகற்றுவதிலும் அவற்றை அப்புறப்படுத்துவதிலும் சென்னை மாநகராட்சிக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. அந்த வகையில் குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து அளித்தால், அந்த வேலையை ஓரளவுக்கு எளிதில் செய்து விடலாம். ஆனால் பலமுறை சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் சென்னை மக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் குப்பைகளை தரம் பிரித்து அதன் பின்பு அதனை அழிப்பது என்பதில் சென்னை மாநகராட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சென்னையில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பை கிடங்கு மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அந்தப் பகுதி முழுவதும் மக்கள் வாழ முடியாத நிலையில், தொடர்ந்து சென்னை மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். காலை மற்றும் மாலை வேலைகளில் கடுமையான துர்நாற்றம் மற்றும் மழை காலங்களில் அளவுக்கு அதிகமான துர்நாற்றம், கொசு தொல்லை என பல்வேறு இடர்பாடுகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வந்தனர்.

ஒரு காலகட்டத்தில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதியில் அதிக அளவு மக்கள் தொகை கிடையாது. ஆனால் இன்று பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் ஆகிய இரண்டும் சென்னையோடு ஒன்றி, மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் 34 லட்சம் கன மீட்டர் அளவில் பல்வேறு வகை குப்பைகள் இங்கு குவிக்கப்பட்டுள்ளன.

இந்த குப்பைகளை ரூ.350 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் செய்து அந்த நிலத்தை மாநகராட்சி சார்பில் மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, குப்பைகள் கடந்த ஆண்டு முதல் அகற்றப்பட்டு 50% பணிகள் முடிந்துள்ளன. பெருங்குடியை தொடர்ந்து தற்போது வடசென்னை பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான கொடுங்கையூர் குப்பை கிடங்கிலும் மலைபோல குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கு 342.91 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இதில் 252 ஏக்கர் பரப்பளவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கு அமைந்து சுமார் 80 ஆண்டுகள் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இந்த குப்பை கிடங்கில் திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் 66.52 லட்சம் கன மீட்டர் அளவிலான குப்பைகள் இங்கு மலை போல தேங்கியுள்ளன.

இந்த குப்பை குவியலை ரூ.640.83 கோடி மதிப்பில் பயோ மைனிங் முறையில் அகற்ற மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக 6 ஒப்பந்தங்களாக பிரிக்கப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் கொடுங்கையூர் பகுதியில் மிகப்பெரிய அளவில் நிலம் மீட்கப்பட்டு மீண்டும் குப்பை குவியல் வராமல் தடுக்க முடியும்.

மேலும் சென்னை மாநகரத்தின் மற்ற இடங்களில் குப்பை கிடங்கு அமைக்கப்படுவதையும் தடுக்கலாம். ஒருங்கிணைந்த திடக்கழிவு வேளாண்மை திட்டம் கொண்டு வருவதன் மூலம் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தல் போன்றவைக்கு ஆலைகள் அமைக்கப்பட்டு, மாநகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைக் குவியல்கள் ஒரே இடத்தில் தேங்காமல் அவற்றையும் தடுக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (24.02.2024) இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டானின் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் கொங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி, ஆர்கே நகர், மணலி, மாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். இந்த திட்டம் தொடங்கப்பட்டு படிப்படியாக இங்குள்ள குப்பைகள் பயோ மைனிங் மூலம் அழிக்கப்படுவதன் மூலம் காற்றின் மாசு குறைந்து, கொசு தொல்லையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் திட்டம் மூலம் குப்பைகள் அகற்றப்படுவது குறித்து பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் கூறுகையில், ‘நான் இந்த பகுதியில் மாமன்ற உறுப்பினராக இருந்தபோது, இதுகுறித்து பலமுறை சென்னை மாமன்ற கூட்டத்தில் பேசி உள்ளேன். தற்போது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த பிறகு பலமுறை குப்பை கிடங்கு பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளேன்.

இதற்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. இரண்டு முறை தேர்தலை சந்தித்தபோதும், இரண்டு முறையும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனக் கூறியிருந்தேன். அதன் மூலம் பல்வேறு பிரச்னைகளை கடந்து இன்று இந்த கனவு திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் கொடுங்கையூர் மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது’ என தெரிவித்தார்.

* அடித்தட்டு மக்களின் கோரிக்கை நிறைவேறியது
கொடுங்கையூர் குப்பை கிடங்கின் பெரும்பாலான பகுதி அமைந்துள்ள இடம் 37வது வார்டுக்கு உட்பட்ட பகுதி. இந்த பகுதியின் மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு கூறுகையில், ‘எனது வார்டில் மிகப்பெரிய பிரச்னை என்று சொன்னால், அது கொடுங்கையர் குப்பைக் கிடங்கு பிரச்னைதான். இங்கு அடித்தட்டு மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் அவர்கள் அதிக அளவில் கொசு தொல்லைகளால் பாதிக்கப்படுவார்கள். நான் ஏரியாவுக்குள் சென்றாலே எங்களது நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு வருமா என கேட்பார்கள்.

அந்த வகையில் பல ஆண்டு பிரச்னைக்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு பிரச்னை குறித்து பலமுறை மாமன்றத்தில் பேசி உள்ளேன். இது மிகப்பெரிய அளவில் செலவு செய்து முடிக்க வேண்டிய பணி என்பதால், இதற்கு பல்வேறு மூலதான நிதிகளை பெற்று தற்போது இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும், எங்களது கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு நன்றி’ என தெரிவித்தார்.

The post நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ரூ.640 கோடியில் பயோ மைனிங் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Kodungaiyur ,Chief Minister ,M. K. Stalin ,Tiruvottiyur ,M.K.Stalin ,Kodunkaiyur ,Chennai Corporation ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...