×

ஏடிஎம் மிஷினில் டேப் ஒட்டி பணம் திருட முயற்சி: வடமாநில வாலிபர்கள் கைது

பெரம்பூர்: ராஜமங்கலம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் டேப் ஒட்டி நூதன முறையில் பொதுமக்களின் பணத்தை திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொளத்தூர் – திருமலைநகர் 200 அடி சாலையில் எஸ்பிஐ வங்கி உள்ளது. அதன் அருகே அந்த வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 20ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் இந்த ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த 2 பேர் ஏடிஎம் லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது, எஸ்பிஐ வங்கி மும்பை தலைமையகத்தில் அலாரம் அடித்துள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த பணியாளர்கள், தொலைபேசி மூலம் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது 2 பேரும் தப்பித்து ஓடி விட்டனர். இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நேற்று மாதவரம் பகுதியில் வைத்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுஜ் (21) மற்றும் விணைகுமார் (19) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் மாதவரத்தை சேர்ந்த வேணுகோபால் என்பவரிடம் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளனர்.

இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று இருவரும் ஏடிஎம்-ல் நுழைந்து அதில் பணம் வெளியே வரும் பகுதியில் சில்வர் நிற டேப்பை ஒட்டி உள்ளனர் இதன் மூலம் பொதுமக்கள் பணம் எடுக்கும்போது, பணம் வெளியே வராமல் ஏடிஎம் மிஷினில் உள்ள ஒரு சிறிய பாக்சில் விழுந்துவிடும் அதன் பிறகு அந்த பெட்டியை திறந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து, அந்த பெட்டியை திறக்கும் போது அலாரம் அடித்துள்ளது. இதனால் போலீஸ் வருவதை அறிந்து கொண்டு முன்கூட்டியே அவர்கள் அங்கிருந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஏடிஎம் மிஷினில் டேப் ஒட்டி பணம் திருட முயற்சி: வடமாநில வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Rajamangalam ,SBI ,Kolathur-Tirumalainagar road ,Chennai ,Dinakaran ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது