×

விதிகளை மீறி ஏரியிலிருந்து மண் ஏற்றிச்சென்ற கனரக லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்: சூனாம்பேட்டில் பரபரப்பு

செய்யூர்: சூனாம்பேடு அருகே விதிகளை மீறி ஏரியில் இருந்து மண்ணை ஏற்றிச்சென்ற கனரக லாரிகளை, கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சூனாம்பேடு ஊராட்சியில் ஒத்திவாக்கம் மற்றும் தோட்டச்சேரி கிராமங்கள் உள்ளன. இதில், ஒத்திவாக்கம் கிராம பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரி நீரை ஒத்திவாக்கம் மற்றும் தோட்டச்சேரி கிராம மக்கள், கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காகவும் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக, இந்த ஏரி பகுதியில் உள்ள கிராவல் மண்ணினை கடந்த 10 நாட்களுக்கு மேலாக, பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்து, அதனை இரவும் பகலுமாக கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த ஏரி நீர் மூலம் தோட்டச்சேரி கிராம விவசாயிகள் பெறும் பயனடைந்து வந்தநிலையில், தற்போது ஏரி மண் 3 அடிக்கும் மேலாக அள்ளுவதாவதாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார்கள் அளித்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த தோட்டச்சேரி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஏரியிலிருந்து மண் ஏற்றிச்சென்ற லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சூனாம்பேடு காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம் சம்பவ இடத்திற்கு சென்று, கிராமமக்களை சமரசம் செய்ததோடு கிராமமக்கள் புகாரின்படி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post விதிகளை மீறி ஏரியிலிருந்து மண் ஏற்றிச்சென்ற கனரக லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்: சூனாம்பேட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Soonampet ,Seyyur ,Soonampedu ,Chengalpattu District ,Seyyur Circle ,Soonambedu Panchayat Extension and Plantation ,Soonambed ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு கலெக்டர், எம்எல்ஏ...