×

நூறாண்டுகளை கடக்கும் பாளை மண்டல அலுவலக கட்டிடம்: பராமரிப்பு இல்லாததால் ஊழியர்கள் அச்சம்

நெல்லை: நூறாண்டுகள் கடக்கும் பாளை மண்டல அலுவலக கட்டிடத்தில் பராமரிப்பு இல்லாததால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 3 நகராட்சிகளை இணைத்து நெல்லை மாநகராட்சியாக கடந்த 1996ல் அரசு அறிவித்தது. இதில் பாளையங்கோட்டை நகராட்சி மிகவும் முக்கியம் வாய்ந்தது. பாளை திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ள பாளை நகராட்சி கட்டிடம் 1923ம் ஆண்டு பிப்.22ம்தேதி சென்னை மாகாண கவர்னராக இருந்த லார்டு வில்லிங் கூன் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. மாநராட்சி அலுவலகம் மற்றும் மேல்தளத்தில் கூட்டரங்கு என உள்ள கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.

இந்த அலுவலகம் 1925ம் ஆண்டு அக்.24ல் சென்னை மாகாண கவர்னர் லார்டு கோசல் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. கட்டக்குத்து பலகைகளுடன் அக் காலத்தில் சுண்ணாம்பு கல் மற்றும் தூண்கள் அமைத்து கட்டப்பட்ட கட்டிடம் இன்றும் வானுயர்ந்து காணப்படுகிது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட நெல்லை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் நெல்லை மாவட்டத்தில் இன்றும் இயங்கி வருகின்றன. இதேபோல் பாளை நகராட்சி அலுவலகமும் தற்போது பாளை மண்டல அலுவலகமாக இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்திற்குள் இருப்பது மின்விசிறி இல்லாத நேரத்திலும் குளுமையாக இருப்பதாக அங்கு வேலை பார்ப்பவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இன்னும் பல ஆண்டுகள் உறுதியுடன் இருக்கும் இக் கட்டிடம் தற்போது பராமரிப்பின்றி, பொலிவிழந்து காணப்படுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் அலுவலகத்தின் மேல் பகுதியில் உள்ள சிலாப்புகள் உடைந்து அங்கள்ள ஊழியர்கள் தலையைில் விழக் கூடிய நிலையில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உதவி வருவாய் அலுவலர் அறையின் மேல்பகுதியில் உள்ள சிலாப் உடைந்து விழுந்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதுபோல் மின்சார ஸ்விட்ச் பாக்ஸ்களும் பாதுகாப்பில்லாமல் இஙகு காணப்படுகிறது. எனவே அந்த கட்டிடத்தை பராமரித்து ஸ்விட்ச் பாக்ஸ்களை சரி செய்ய வேண்டும் என்று அங்கு பணியாற்றுபவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post நூறாண்டுகளை கடக்கும் பாளை மண்டல அலுவலக கட்டிடம்: பராமரிப்பு இல்லாததால் ஊழியர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Palai ,Mandal Office ,Nellai ,Nella ,Palayangottai ,Melapalayam ,Balayankota ,Municipality ,Palai Mandal Office Building ,Dinakaran ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...