×

கோவை வேளாண் பல்கலை.யில் 6-வது மலர் கண்காட்சி: துணைவேந்தர் துவக்கி வைத்தார்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6-வது மலர் கண்காட்சி ‘கனவுகள் மலரட்டும்’ என்ற மைய கருத்துடன் இன்று நடக்கிறது. கண்காட்சியை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார். இதில், ரோட்டரியன் தலைவர் நாகராஜ், கண்காட்சி செயலாளர் ரோட்டரியன் காட்வின் மரியா விசுவாசம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் இணை இயக்குநர் அகர்வால் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த கண்காட்சி வரும் 25-ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சி, 25 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்துகிறது. இதில், மல்லிகை, செண்டுமல்லி, சம்பங்கி, கனகாம்பரம், தாமரை, செவ்வந்தி, ஆஸ்டர், பெட்டூனியா, சால்வியா மற்றும் பேன்சி போன்ற உதிரி மலர்களைக் கொண்டும், ரோஜா, கார்னேசன், ஆர்க்கிட், ஆந்தூரியம், லில்லியம், ஜெர்பெரா, லிஸியான்தஸ், ஹெலிகோனியா, ஜிப்ஸோபில்லா, ஸ்டேடிஸ் மற்றும் சொர்கத்து பறவை போன்ற கொய்மலர்களாலும் அலங்கார வகை பிராசிகா, பேங்க்ஸியா, லூயூகோஸ்பெர்ம் மற்றும் அலங்கார அன்னாசி போன்ற அரியவகை அயல்நாட்டு மலர்களையும் கொண்டு கலைநயத்துடன் பல்வேறு உருவ அமைப்புகள் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

அரிய வகை மலர்கள் மூலம் செய்யப்பட்ட முயல், யானை, பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வாடிவாசல், ‘இக்கிபானா’ என்ற ஜப்பானிய வகை அலங்கார அமைப்புகள் உள்பட பல்வேறு வடிவங்களுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உள்ளூரில் உற்பத்தியாகும் பல்வேறு காய்கறிகளைக் கொண்டு காய்கறி உருவ அமைப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. சிறு தானியங்களின் முக்கியத்துவம் விளக்கும் வகையில் கேழ்வரகு, சோளம் பயன்படுத்தி செஸ் போர்டு போன்றவை இடம்பெற்று இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு தாவர, பழ மற்றும் அலங்கார மரங்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட போன்சாய் குட்டை செடி அலங்காரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

உயர் ரக நாய்கள் அணிவகுப்பு, பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு, புகைப்பட மற்றும் ஒவியக்கண்காட்சி, இசை நிகழ்ச்சி மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டு திடல் போன்ற அம்சங்களை மலர்க் கண்காட்சி நடைபெறும் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலங்கார மலர் கலையை ஊக்குவிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு சிறந்த அலங்கார மலர் கலையை காட்சிப்படுத்தும் போட்டியும் நடத்தப்படுகிறது. தோட்டக்கலை சார்பு நிறுவனங்கள், வேளாண்மை சார்ந்த தொழில் நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் சித்த மருத்துவ துறைகள் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மலர் கண்காட்சியை கோவை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகள், பெற்றோர், பொதுமக்கள் என பலர் குவிந்தனர். இந்த கண்காட்சி வரும் 25-ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.

The post கோவை வேளாண் பல்கலை.யில் 6-வது மலர் கண்காட்சி: துணைவேந்தர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : COVE AGRICULTURAL UNIVERSITY ,Flower Exhibition ,Vice ,KOWAI ,6TH FLOWER EXHIBITION ,TAMIL ,NADU AGRICULTURAL UNIVERSITY ,KHANAVU MALARATUM ,Deputy Minister of Tamil Nadu Agricultural University ,Geethalakshmi ,Rotary ,Nagaraj ,Exhibition Secretary ,Goa Agricultural University ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!