×

601 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை மற்றும் 4 வீராங்கனைகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ரூ.16.31 கோடி மதிப்பில் 601 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகள் மற்றும் 3% விளையாட்டு வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் 4 வீராங்கனைகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கினார்.

* உயரிய ஊக்கத் தொகை

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (23.02.2024) உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 601 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ. 16 கோடியே 31 லட்சம் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

* 3% விளையாட்டு வேலைவாய்ப்பில் அரசுப் பணி நியமன ஆணை.

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3% விளையாட்டு வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் கால்பந்து வீராங்கனை எஸ். ரெங்கநாயகி, வீல்சேர் பென்சிங் வீராங்கனை ஆர்.சங்கீதா, வூசு வீராங்கனைகள் பி.அகல்யா மற்றும் ஆர்.வெர்ஜின் ஆகியோருக்கு வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறையில் இளநிலை உதவியாளராக அரசுப் பணி நியமன ஆணையினை வழங்கினார்.

* இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசியதாவது

தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று நம்முடைய இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ரூ. 16 கோடியே 31 லட்சம் அளவில் உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கோவாவில் நடைபெற்ற 37வது தேசிய விளையாட்டுப் போட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி, ஜெர்மனியில் நடைபெற்ற 8வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டி, தாய்லாந்தில் நடைபெற்ற உலக திறன் விளையாட்டுப் போட்டி, டெல்லியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி மற்றும் பன்னாட்டு அளவில் நடைபெற்ற பில்லியர்ட்ஸ் போட்டி, ஆசிய சைக்கிளிங் போட்டி மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேசிய நீச்சல் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் என கிட்டத்தட்ட 9க்கும் மேற்பட்ட போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 601 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ. 16 கோடியே 31 லட்சம் அளவிற்கு உயரிய ஊக்கத்தொகை இன்று முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் இங்கு வழங்கி கொண்டிருக்கிறோம்.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 5 கோடியே 28 லட்சம் அளவுக்கு உயரிய ஊக்கத் தொகையாக வழங்கினோம். அதற்கு முன்பாக நவம்பர் மாதத்தில் பல்வேறு போட்டிகளில் வென்ற நம்முடைய விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ரூ. 3 கோடியே 80 லட்சம் அளவுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கினோம். சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் வென்ற நம்முடைய விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ரூ. 9 கோடியே 40 லட்சம் அளவுக்கு உயரிய ஊக்கத் தொகை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் வழங்கினார்கள்.

இந்திய ஒன்றியத்திலேயே ஒரு மாநில அரசு தன்னுடைய விளையாட்டு வீரர்களை ஊக்கவிக்க தொடர்ந்து இது மாதிரியான உயரிய ஊக்கத் தொகை வழங்குகிறது என்றால் அது ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு மட்டும் தான். நம்முடைய துறைக்கு பட்ஜெட் மிக குறைவு தான் ரூ. 440 கோடி தான். அந்த நிதி ஒதுக்கீட்டில் எவ்வளவு அதிகமாக தர முடியுமோ அவ்வளவு அதிகமான தொகையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வழங்குகின்றோம்.

உங்களுடைய சாதனைகள் உயர்வது போல இந்த ஊக்கத் தொகையும் வருங்காலங்களில் நிச்சயமாக அதிகமாக்கப்படும். உங்கள் திறமைக்கு ஒரு அங்கீகாரமாக தான் இந்த உயரிய ஊக்கத் தொகை நம்முடைய அரசு திராவிட மாடல் அரசு வழங்கிக் கொண்டு இருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு எப்படி மற்ற துறைகளிலும் இந்திய ஒன்றியத்திற்கே ஒரு வழிகாட்டியாக இருக்கின்றதோ, அதே போல விளையாட்டிலும் துறையும் இந்திய ஒன்றியத்திற்கும் ஒரு வழிகாட்டியாக அமைக்கத் தான் நாம் அனைவரும் பணியாற்றி கொண்டிருக்கிறோம்.

அரசு முயற்சிகளை எடுக்கின்றது. வாய்ப்புகளை வசதிகளை உங்களுக்கு ஏற்படுத்தி தருகின்றது. இவை அனைத்தையும் சரியாக பயன்படுத்தி நீங்கள் சாதனை படைக்கும் போது தான் அந்த முயற்சிக்கு ஒரு பலன் ஏற்படுகின்றது. அந்த பலன் அடுத்தடுத்து புதிய முயற்சிகளை எடுக்கவும், உங்களுக்கு இன்னும் வலிமையாக துணை நிற்கவும் ஒரு தூண்டுதலை எங்களுக்கு ஏற்படுத்துகின்றது. இன்று தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்கு பல்வேறு இடங்களிலும் இருந்து பாராட்டும் அங்கீகாரமும் குவிந்து வருகிறது.

சென்ற வாரம் பாராம்பரியமிக்க தி இந்து குழுமத்தின் சார்பாக ஸ்ப்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிக்கை தன்னுடைய Aces 2024 Sports Star Award நிகழ்ச்சியில் நம்முடைய தமிழ்நாட்டிற்கு Best State Promoting Sports என்ற விருதை தந்து எங்களை பெருமை படுத்தினார்கள். அந்த பெருமை உங்களுக்கு தான் சேரும். அதற்கு முன்பாக CII (Confideration of Indian Industry) அமைப்பின் சார்பாக Sports Business Award நிகழ்ச்சியில் நம்முடைய தமிழ்நாட்டிற்கு Best State Promoting Sports என்ற விருதையும் கொடுத்து கௌரவ படுத்தினார்கள்.

அந்த விருதும் உங்களுக்கு தான் சேரும். இந்த அங்கீகாரம் எல்லாம் அரசுக்கு கிடைக்கிறது என்றால், அதற்கு காரணம் இங்கே இருக்கின்ற விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள், உங்களுக்கு தான் அந்த முழு பெருமை. உங்களால் தான் அரசுக்கு இத்தனை பெருமைகளும் பாராட்டுகளும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்திக் காட்டினோம். அந்தப் போட்டியில் கூட 38 தங்கப் பதக்கங்கள், 21 வெள்ளிப் பதக்கங்கள் மற்றம் 39 வெண்கல பதக்கங்கள் என தமிழ்நாடு முதல் முறையாக 98 பதக்கங்கள் வென்றுள்ளது.

பதக்க பட்டியலில் சென்ற வருடம் 8வது இடத்தில் இருந்து இப்போது 2வது இடத்தை பிடித்துள்ளோம். நம்முடைய கழக அரசு தன்னுடைய திட்டங்களால் தமிழ்நாட்டில் இருந்து தலைசிறந்த மருத்துவர்கள். கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியுள்ளோம். இப்போது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசில் தமிழ்நாட்டிலிருந்து தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

அந்த விளையாட்டு வீரர்கள் வேறு யாருமில்லை. இங்கே வந்திருக்க கூடிய அமர்ந்திருக்க கூடிய உங்களைத் தான் கூறுகிறேன். இன்னும் பல விளையாட்டு வீரர்களை உருவாக்குகின்ற எண்ணத்தோடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மிக பெரிய அளவில் சென்ற வருடம் நடத்தி முடித்தோம். கிட்டதட்ட 3.71 லட்சம் பேர் முதலமைச்சர் கோப்பையில் கலந்து கொண்டார்கள். பல திறமையாளர்களை அடையாளம் காட்டி, கைபிடித்து அழைத்து வந்தது அந்த முதலமைச்சர் கோப்பை தான். குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சரியான களம் அமைத்து கொடுப்பதற்கு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் அடித்தளமாக அமைந்தது.

சென்ற வாரம் கூட மதுரையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு “கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” எனும் திட்டத்தை தொடங்கி வைத்தோம். ரூ 86 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் இருக்க கூடிய 12600 கிராமப் பஞ்சாயத்திற்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்குகின்ற முயற்சியாக மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளுக்கு முதற்கட்டமாக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அளித்தோம். இந்தியாவிலேயே விளையாட்டு என்றால் தமிழ்நாடு தான் centre of attraction ஆக இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய முதலமைச்சருடைய ஒரே எண்ணம். அதனால் தான் தொடர்ச்சியாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி, ஸ்குவாஷ் உலக கோப்பை, World Surfing League. Cyclothon, Chennai Chess Masters 2023, National Hockey Tournament தொடர்ச்சியாக நடத்தி வந்து கொண்டிருக்கிறோம்.

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலமாக வீரர் வீராங்கனைக்கு உதவி தொகையினையும் வழங்கி வருகின்றோம். இதுவரைக்கும் 300க்கும் அதிகமான விளையாட்டு வீரர்களுக்கு தனி நபர் மற்றும் குழு போட்டிகளில் பங்கேற்கப்பதற்காக ரூ.6 கோடி அளவிற்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக நிதியுதவி அளித்திருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் நம்முடைய முதலமைச்சர் தான் முதல் முறையாக தன்னுடைய சொந்த நிதியிலிருந்து நாங்கள் கேட்டுக்கொண்டதற்காக 5 லட்சம் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கினார்கள். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து உதவித் தொகை பெற்று பல்வேறு சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்துள்ள தங்கை பூஜா ஸ்வேதா, தம்பி சுதர்சன், ஜெகதீஷ் தில்லி, தமிழரசி. நித்திக் நாதெல்லா, தன்யதா, மனோஜ், கணேசன், பாலசுப்பிரமணியன், ஆர். வெண்ணிலா, இன்பத் தமிழினி. என். நளினி, cerebral palsy மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் இங்கு வந்திருக்கிறார்கள். அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

அது மட்டுல்ல ஒலிம்பியட்டிற்கு தமிழ்நாட்டிற்கு ஏராளமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்கச் செய்வதற்காக சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகளையும் திறந்து வைக்கின்றோம். தமிழ்நாடு விளையாட்டுத் துறை கட்டமைப்பை மேம்படுத்த தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டரங்கம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

9 மினி விளையாட்டரங்கங்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பணிகளை துவங்கி வைத்தார்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 76 பயிற்றுநர்கள் மிகுந்த வெளிப்படை தன்மையுடன் நியமித்துள்ளோம். ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகின்றோம். 6 மாவட்டங்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம், 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி. 6 இடங்களில் பாரா விளையாட்டு அரங்கங்களையும் ஏற்படுத்த உள்ளோம். தமிழ்நாட்டைப் போல மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு மாநிலம் இந்தியாவிலேயே இருக்க முடியாது. ஏனென்றால், நம்முடைய அரசு “திராவிட மாடல்” அரசு என்கின்றோம்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொல்கிறார். திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்றால் “எல்லோருக்கும் எல்லாம்” கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் அரசினுடைய இலட்சியம். ஆகவே தான், மாற்றுத் திறனாளிகளுடைய சாதனைகளுக்கு தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், நம்முடைய துறையும் துணை நிற்கும். ஒரு மாற்றுத் திறனாளி விளையாட்டுப் போட்டியில் சாதிக்கும் போது, அந்த வெற்றி 100 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்தியாக இருக்கும்.

இங்கே வந்திருக்க கூடிய உங்கள் அனைவருடைய வெற்றிப் பயணமும் தொடரட்டும். நீண்ட தூரம் ஓடினால் தான் அதிக உயரம் தாண்ட முடியும் என்று நம்முடைய முத்தமிழ் கலைஞர் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். நீங்கள் நீண்ட தூரம் ஓடுவதற்கும் அதிக உயரம் தாண்டுவதற்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எப்பொழுதும் துணை நிற்பார்கள். அமைச்சர் என்ற வகையில் மட்டுமல்ல.

ஒரு அண்ணணாக, ஒரு சகோதரனாக, நான் எப்போதுமே உங்களுக்கு துணை நிற்பேன் என்ற உறுதியை உங்களுக்கு வழங்குகின்றேன். உயரிய ஊக்கத் தொகை பெற்றுள்ள அத்தனை வீரர் வீராங்கனைகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் அன்பையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, வடச் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலாளர் பா. ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி துறை ஆணையர் . டி. ஜகநாதன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ. பரந்தாமன், ஜே. ஜே. எபினேசர். ஐட்ரீம் இரா. மூர்த்தி ஆகியோர். சென்னை பெருநகர மாநகராட்சி துணை மேயர். எம். மகேஷ் குமார். தேசிய சைக்கிளிங் வீராங்கனை செல்வி. தமிழரசி, தேசிய பாரா தடகள வீராங்கனை செல்வி. கீர்த்திகா, பில்லியர்ட்ஸ் வீரர் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 601 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை மற்றும் 4 வீராங்கனைகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Adyanidhi Stalin ,CHENNAI ,MINISTER OF ,YOUTH WELFARE AND SPORT DEVELOPMENT DEPARTMENT ,SPORT DEVELOPMENT ,Dinakaran ,
× RELATED பாஜகவின் பொய் பிரச்சாரம்...