×

ஆர்டர் செய்தால் வீட்டிற்கே தேடி வரும் சந்தை விலையில் ஃப்ரெஷ் காய்கறிகள்!

நன்றி குங்குமம் தோழி

வேலைக்கு செல்லும் காரணத்தால் வீட்டிற்குத் தேவையான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் அனைத்தும் வார இறுதி நாட்களில் வாங்குவது பழக்கமாகிவிட்டது. இதன் மூலம் அந்த வாரம் முழுதும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் தேவையான உணவுகளை சமைக்க சுலபமாக இருக்கும். ஆனால் நம் பெற்றோர்கள், குறிப்பாக ஃப்ரிட்ஜ் வரும் முன் சமையலுக்கு தேவையான காய்கறிகளை அன்றே வாங்கி சமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அந்தப் பழக்கம் எல்லாம் இன்றைய அவசர யுகத்தில் முற்றிலும் மாறிவிட்டது. அதனை மீண்டும் அறிமுகம் செய்துள்ளார் மதுரையை சேர்ந்த சோம சுந்தரம். இவர் இன்றைய டெக்னாலஜியினை மக்களின் பல்ஸிற்கு ஏற்ப புரிந்து கொண்டுள்ளார். காரணம், இன்று உணவு மட்டுமில்லாமல் வீட்டிற்குத் தேவையான பொருட்களையும் ஆன்லைன் மூலமாக மக்கள் வாங்க முன் வருகிறார்கள்.

அதை தெரிந்து கொண்ட இவர் வீட்டிற்கே தன்னுடைய ‘காய்கனி’ என்ற ஆப் மூலம் மதுரை மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்களை டெலிவரி செய்து வருகிறார். ‘‘சொந்த ஊர் சேலம் பக்கத்துல இருக்கிற கிராமம். சாஃப்ட்வேர் வேலையில் இருந்ததால், நான் மதுரையில் தங்கி வேலை பார்த்து வந்தேன். ஆனால் அந்த வேலையில் உள்ள நேரம் மற்றும் வேலைப்பளுக் காரணமாக உடல் ரீதியாக சில பிரச்னைகளை சந்தித்தேன். அதனால் என்னால் அந்த வேலையை தொடர முடியவில்லை.

ராஜினாமா செய்திட்டேன். அந்த சமயத்தில்தான் நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஒருவரிடம் வேலை செய்யும் போது டார்கெட் மற்றும் அதிக வேலைப்பளுவினை சந்திக்க வேண்டும். ஆனால் அதுவே நாம் சொந்தமாக தொழில் செய்யும் போது கடின உழைப்பு போட்டாலும், மனஉளைச்சல் இல்லாமல் வேலை பார்க்க முடியும் என்று. அதனால் இரண்டு தொழில்களை துவங்கினேன். ஆனால் என்னால் அதனை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. அதன் பிறகு காய்கறிகளை பேக் செய்து தரும் வேலையை பார்த்து வந்தேன். அதில்தான் காய்கறிகளை எவ்வாறு பேக் செய்ய வேண்டும். அதனை ஃப்ரெஷ்ஷாக எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று எல்லாம் தெரிந்து கொண்டேன்.

சொல்லப்போனால் அந்த தொழிலில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் நான் அறிந்து கொண்ேடன். அதன் பிறகு இந்த தொழிலை சொந்தமாக தொடங்கினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் காய்கறி கடை திறக்க பல இடங்களில் வாடகைக் கடையினை தேடினேன். ஆனால் எந்தக் கடையும் எனக்கு சரியா அமையவில்லை. ஒன்று அதிக வாடகையாக இருந்தது. அப்படியே வாடகை குறைவாக இருந்தாலும் அவை ஒரு தெருவில் சின்ன சந்திற்குள் இருந்தது.

அப்படி இருக்கும் இடத்தில் மக்கள் காய்கறி வாங்க வரமாட்டாங்க. விற்பனை அடிபடும். மேலும் ஏற்கனவே நான் இதற்கு முன் செய்த இரண்டு தொழிலினால் நஷ்டம் ஏற்பட்டதால், இந்த தொழிலில் நான் மிகவும் கவனமாக இருக்க விரும்பினேன். ஆட்களை வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிலையிலும் நான் இல்லை என்பதால், சொந்தமாக காய்கறி கடை ஆரம்பிக்கும் எண்ணத்தை கைவிட்டேன்’’ என்றவர் ஆன்லைன் முறையில் காய்கறிகளை விற்கும் நிறுவனம் ஆரம்பித்தது குறித்து விவரித்தார்.

‘‘பெண்கள் மட்டுமல்லாமல், அனைவரும் ஆன்லைனில் பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். சாதாரண கைப்பை, உடைகளில் ஆரம்பித்து வீட்டிற்குத் தேவையான எலக்ட்ரானிக் ெபாருட்களையும் கூட ஆன்லைனில் தான் வாங்க விரும்புகிறார்கள். ஆன்லைனில் விற்பதில் இருக்கும் செளகரியம், வாடகைக்கு கடையினை தேட வேண்டிய அவசியம் இல்லை. பொருட்களை சேமித்து வைக்க வேண்டாம். மேலும் இரண்டு ஆட்களை கொண்டே வேலையை முடித்துவிடலாம். டெலிவரி மட்டும் சரியான நேரத்தில் செய்து விட்டால் போதும். உணவு, உடை, அத்தியாவசிய பொருட்களுக்கான ஆன்லைன் விற்பனைகள் நிறைய இருக்கு. ஆனால் காய்கறிகளுக்கு ஆன்லைனில் கடைகள் இல்லை.

அப்படியே நாம் ஆர்டர் செய்தாலும், அவர்கள் நாம் குறிப்பிடும் கடைகளில்தான் காய்கறிகளை வாங்கி வீட்டிற்கு டெலிவரி செய்வார்கள். ஒன்று இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உள்ளன. அவர்களுக்கு என தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். அப்படிப் பார்க்கும் போது அவர்களுக்கு நான் பெரிய அளவில் போட்டியாளராக இருக்க முடியாது என்றாலும், நாளடைவில் என்னால் இந்தத் தொழிலில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. அந்த அடிப்படையில்தான் நான் இந்த ஆன்லைன் காய்கறி கடையினை துவங்கினேன்.

நான் ஏற்கெனவே சாஃப்ட்வேரில் வேலை செய்து வந்ததால் என்னுடைய நண்பர்களுடன் இணைந்து ‘காய்கனி’ என்கிற பெயரில் ஆப் ஒன்றை உருவாக்கினோம். மதுரையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மட்டுமே காய் மற்றும் கனிகளை விற்பதுதான் எங்களின் முதல் ஐடியா. காய்கறி விற்பனையில் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாது என்பதால், அதே சமயம் மக்களுக்கு கவர்ச்சிகரமான விலையில் கொடுக்க வேண்டும் என்பதால், சந்தையில் காய்கறி என்ன விலையில் விற்கப்படுகிறதோ அதே விலையில் கொடுக்க திட்டமிட்டோம்.

இதன் அடிப்படையில் ஒரு நாளில் எவ்வளவு கிலோ காய்கறிகள் ஆர்டர் வருகிறதோ, அந்த காய்கறிகளை சந்தையில் வாங்கி அவர்களுக்கு டெலிவரி செய்திடுவோம். இதில் மிகவும் முக்கியமான விஷயம் நாங்க கடைபிடிப்பது, சந்தையில் இருந்து வாங்கி வரும் காய்கறியில் சொத்தை, அழுகியது இல்லாமல் நல்ல காய்கறிகளை மட்டுமே தேர்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறோம். அதனால் காய்கறிகள் மற்றும் பழங்களை எங்களால் அவர்களுக்கு ஃப்ரெஷ்ஷாக டெலிவரி செய்ய முடிகிறது. அதாவது எங்களுக்கு 100 கிலோ உருளைக்கிழங்கு ஆர்டருக்கு வந்து இருக்கிறது என்றால், நாங்க சந்தையில் 100 கிலோ உருளையை வாங்கிடுவோம். அவர்கள் மொத்தமாக கொடுக்கும் போது, அதில் சிலது நன்றாக இருக்காது. அதை பிரித்து தனியே எடுத்து வைத்து நல்ல காய்கறிகளை மட்டும் எடை போட்டு பேக் செய்து டெலிவரி செய்கிறோம்.

காய்கறிகளை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் அவை ஃப்ரெஷ்ஷாக இருக்காது. மேலும் அவை கெட்டுப்போகக்கூடியது என்பதால் நாங்க அதனை பதப்படுத்துவதில்லை.ஒருநாளுக்கு முன்பு ஆர்டர் கொடுக்க வேண்டும். நாங்க மறுநாள் அந்த காய்கறிகளை ஃப்ரெஷ்ஷாக சந்தையில் வாங்கி பேக் செய்து உடனே டெலிவரி செய்கிறோம். இதனால், அன்று ஃப்ரெஷ்ஷாக காய்கறிகளை சாப்பிட்ட திருப்தி மக்களுக்கு ஏற்படுகிறது. காய்கறியை தொடர்ந்து பலர் கீரை மட்டுமில்லாமல் பழங்களும் கேட்டதால், அதனையும் விற்பனை செய்கிறோம். ஒரு தொழில் ஆரம்பித்தால், அதனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதனால் நண்பர்களின் ஆலோசனையில் பழச்சாறுகள் மற்றும் காய்கறிகளை வெட்டிக் கொடுக்கிறோம். மாதுளை போன்ற பழங்களை உரித்தும் பேக் செய்து தருகிறோம். இது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சுலபமாக இருப்பதால், பலர் நறுக்கிய காய்கறிகளையே அதிகம் விரும்புகிறார்கள்.

பிசினஸ் ஆரம்பித்த போது, முதலில் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் எங்களின் ஆப் பற்றி அங்குள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இப்போது நடுத்தர பொருளாதார ரீதியில் உள்ளவர்களும் என்னிடம் காய்கறிகளை வாங்க ஆரம்பித்துள்ளனர். இந்த மாற்றம் என்னுடைய தொழிலுக்கு மிகப்பெரிய வலுவினை சேர்த்துள்ளது.

ஆரம்பத்தில் நானே நேரடியாக டெலிவரி செய்து வந்தேன். ஆர்டர்கள் அதிகமானதால், டெலிவரிக்கு மட்டுமில்லாமல் பொருட்களை வாங்கி பேக் செய்யவும் ஆட்களை நியமித்து இருக்கிறேன் ஃப்ரெஷ்ஷான காய்கறிகளை நல்ல தரத்துடன் கொடுத்து வருவதால் தினசரியுமே மக்கள் என்னிடம் காய்கறிகளை ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். தற்போது மதுரை மக்களுக்கு தான் என் சேவையை அளித்து வருகிறேன். அடுத்தடுத்த நகரங்களுக்கும் என்னுடைய ஆப்பினை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது’’ என்றார் சோமசுந்தரம்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post ஆர்டர் செய்தால் வீட்டிற்கே தேடி வரும் சந்தை விலையில் ஃப்ரெஷ் காய்கறிகள்! appeared first on Dinakaran.

Tags : kumkum dohi ,Dinakaran ,
× RELATED மூங்கில் கொண்டு உங்க வீட்டுச் சமையல் அறையை அலங்கரிக்கலாம்!