×

கோடை காலம் தொடங்க உள்ளதால் கால்நடைகளின் தாகம் தீர்க்க குளக்கரையில் குடிநீர் தொட்டி

*பொதுமக்கள் வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை : கோடைகாலம் துவங்க உள்ளதால் கால்நடைகளின் தாகம் தீரக்க குளக்கரைகளில் குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியங்களில் மற்றும் ஆதனக்கோட்டை, பெருங்களூர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு தமிழக அரசு வழங்கும் தடையில்லா மின்சாரத்தை பயன்படுத்தி ஆழ்துளை கிணற்றின் உதவியால் விவசாயம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் குளங்களில் இருந்த சிறிய அளவு நீரும் வற்றி விட்டது. இதனால் மனிதர்கள் கை கால் கழுவ கூட மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் கிராமப்புறங்களில் மக்கள் ஆடு மாடுகளை தரிசு நிலங்களில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று வரும் வேலையில் குளங்களில் நீர் அருந்த இறக்கி விடுவார்கள். கால்நடைகள் நீர் அருந்துவதற்கு கூட தற்சமயம் குளங்கள் வறண்ட நிலையில் இருப்பதால், குளக்கரைகளில் நீர் தொட்டி கட்டி அதில் ஊராட்சி மூலம் குழாய் இணைப்பு கொடுத்து நீர் நிரப்பி வைத்தால் கால்நடைகளுக்கு, மக்களுக்கும் பயன் உள்ள வகையில் இருக்கும் என கால்நடை வளர்ப்போர் கூறுகிறார்கள்.

குளக்கரையில் கால்நடைகளுக்கு நீர் தொட்டி கட்ட அனைத்து இடங்களிலும் தகுந்த வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். மனிதர்கள் தாகம் தணிக்க காசு கொடுத்து நீர் வாங்கும் சூழ்நிலையில் கால்நடைகள் காசுக்கு எங்கே போகும் என கேட்கும் நிலை உள்ளது. வாயில்லா ஜீவன்களுக்கு அதன் நிலை அறிந்து அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடை நீர் தொட்டி கட்டி, அதில் நீர் நிரப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கால்நடைகளுக்கும், கால்நடை வளர்ப்பபவர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

The post கோடை காலம் தொடங்க உள்ளதால் கால்நடைகளின் தாகம் தீர்க்க குளக்கரையில் குடிநீர் தொட்டி appeared first on Dinakaran.

Tags : Gandharvakot ,Pudukottai District ,Kandarvakottai Unions ,Adanakottai ,Perungalur ,North East Monsoon ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...