×

வனப்பகுதிகளில் வறட்சியால் வற்றிய நீர்நிலைகள் வனவிலங்குகளின் தாகத்தை தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு

*வனத்துறை நடவடிக்கை

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல வனச்சரகங்கள் உள்ளன. இதில் அடர் வனப்பகுதியைக் கொண்டதும், புலிகள் சரணாலயத்தை அடக்கிய ஒரு பகுதி சிறுமுகை. தற்போது தமிழகத்தில் கோடை கால துவக்கத்திற்கு முன்னரே கடும் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் உள்ள குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. இதனால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலைந்து திரிந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடாமல் இருக்க வனத்துறையினர் தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கடும் வறட்சியால் அவதிப்பட்டு வரும் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் சிறுமுகை வனச்சரக பகுதிகளில் உள்ள குட்டைகளை தூர்வாரி அதனை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் வாரத்தில் இரு முறை என வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து அதில் இரு தினங்களுக்கு ஒரு முறை தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

இதனால், வனவிலங்குகள் குடிநீர் மற்றும் உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அருகில் இருக்கும் ஊருக்கு புகுவது தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் கோடை காலம் நெருங்கி வருவதால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழையும் அபாயம் உள்ளது, யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டால் அதனை துன்புறுத்தவோ, செல்பி எடுக்கவோ கூடாது. வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை வனப்பகுதியின் அருகே கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என கிராமங்கள் தோறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து வனச்சரகர் மனோஜ் கூறுகையில்,“சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட குட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக வற்றி வருகின்றன. இதனால் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு வன விலங்குகளுக்கு என வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து அதில் வாரத்திற்கு 3 முறை லாரிகள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் வன விலங்குகளின் தண்ணீர் தேவைகள் பூர்த்தியாகும்’’ என்றார்.

The post வனப்பகுதிகளில் வறட்சியால் வற்றிய நீர்நிலைகள் வனவிலங்குகளின் தாகத்தை தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Coimbatore district ,Sirumugai ,Karamadai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து...