×

விருந்து வைப்பதற்காக மறுவீடு அழைத்து வந்தபோது மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி

*திருமணமான 7 நாளில் பரிதாபம்

திருமலை : விருந்து வைப்பதற்காக மறுவீடு அழைத்து வந்தபோது மரத்தில் கார் மோதியதில் புதுமாப்பிள்ளை, எஸ்எஸ்ஐ உள்பட 3 பேர் பலியாகினர். புதுப்பெண் படுகாயம் அடைந்தார். திருமணமான 7 நாளில் இந்த கோரவிபத்து நடந்துள்ளது.ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்தவர் வெங்கடரமணா(55). இவர் நந்தியாலா மாவட்டம் ராச்சர்லா காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது மகள் அனுஷா. ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். கிருஷ்ணா மாவட்டம் மசிலிப்பட்டினம் அருகே உள்ள முஞ்சுலூர் கிராமத்தை சேர்ந்தவர் பவன்சாய்குமார்(25). இவரும் தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் தங்கி, சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் அனுஷாவுக்கும், பவன்சாய்குமாருக்கும் கடந்த 15ம்தேதி அனந்தபூரில் திருமணம் நடந்தது.

இதையடுத்து மறுவீடு அழைத்து வந்து விருந்து வைப்பதற்காக பெண் வீட்டார் ஐதராபாத்திற்கு சென்றனர். நேற்றுமுன்தினம் மாலை வெங்கடரமணா, பவன்சாய்குமார், அனுஷா ஆகியோர் ஒரு காரிலும், உறவினர்கள் மற்றொரு காரிலும் அனந்தபூர் புறப்பட்டனர். மணமக்கள் வந்த காரை டிரைவர் சந்திரா(24) என்பவர் ஓட்டி சென்றார்.

தெலங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் பூத்பூர் மண்டலத்தில் உள்ள அண்ணாசாகர் அருகே மணமக்கள் சென்ற கார் சென்றபோது திடீரென குறுக்கே ஒரு வாகனம் சென்றுள்ளது.
அதிர்ச்சியடைந்த டிரைவர் சந்திரா, அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி நொறுங்கியது. காரில் இருந்த வெங்கடரமணா, பவன்சாய்குமார், டிரைவர் சந்திரா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

புதுப்பெண் அனுஷா படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த மெகபூப் நகர் டிஎஸ்பி வெங்கடேஸ்வரலு, பூட்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த அனுஷாவை மீட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பூர்பூட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 நாளில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post விருந்து வைப்பதற்காக மறுவீடு அழைத்து வந்தபோது மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Pudumappilla ,Parithapam Tirumala ,Pudumappillai ,SSI ,Andhra ,
× RELATED பந்தயத்தில் தோல்வியடைந்த...