×

பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு பணி குலுக்கல் மூலம் அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு

*சிஇஓ முன்னிலையில் நடைபெற்றது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு பணிக்காக, 86 தேர்வு மையங்களுக்கு 1,200 அறை கண்காணிப்பாளர்கள் நேற்று குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறுகிறது. பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும், பிளஸ்1 தேர்வுகள் 4ம் தேதியும் துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தேர்விற்கான முன்னேற்பாடுகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு பிளஸ்1 அரசு பொதுத்தேர்வினை மாவட்டம் முழுவதுமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 9,151 மாணவர்கள், 9,304 மாணவிகள் என மொத்தம் 18,455 பேர் எழுதவுள்ளனர்.

அதேபோல் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வினை மாணவர்கள் 8,479 பேரும், மாணவிகள் 8,932 பேர் என மொத்தம் 17,411 பேர் எழுதுகிறார்கள். பிளஸ்1 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் வெவ்வேறு நாட்களில் நடைபெறுவதால் இரண்டு வகுப்பு தேர்வுகளுக்கும், பொதுவாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுக்காக 86 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளனர். ஒரு மையத்துக்கு ஒரு முதன்மை கண்காணிப்பளார்கள் வீதம் 86 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணிக்க, தேர்வு பணியில் ஈடுபடும் அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்வு, நேற்று நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

மாவட்டத்தில் உள்ள 86 தேர்வு மையங்களுக்கு 1,200 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் பணியாற்றும் அதே ஒன்றியத்துக்குள் வெவ்வேறு தேர்வு மையங்களுக்கு இந்த குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள், அந்த பள்ளியின் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் மையங்களில் தவிர்த்து, பிற மையங்களில் ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்த ஆசிரியருக்கு, எந்த மையத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்கள், அந்த தேர்வு மையங்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. தேர்வு பணியில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் யாரும், பிளஸ்2 பொதுத்தேர்வு பணிக்கு நியமிக்கப்படவில்லை.

அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள், இந்த ஆண்டு நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு என 3 இடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களும், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரடி கண்காணிப்பில் இருக்கும். மாவட்ட கல்வி அலுவலர்களுடன், ஒவ்வொரு மையத்துக்கும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் நியமிக்கப் பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு பணி குலுக்கல் மூலம் அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : CEO ,Namakkal ,Namakkal district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...