×

எல்லை பிரச்னையால் குடிநீர் இணைப்பு இன்றி தவிக்கும் கிராம மக்கள்

*5.கி.மீ. அலைந்து திரியும் அவலம்

நாகப்பட்டினம் : புதுச்சேரி தமிழ்நாடு எல்லையில் கள்ளிக்காட்டு போலகம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 20 ஆண்டாக குடிநீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காததால் குளத்து நீரை எடுத்து வந்து குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகர கொந்தகை ஊராட்சியில் இந்த கள்ளிக்காட்டு போலகம் கிராமம் அமைந்துள்ளது. ஆனால் புதுச்சேரி தமிழ்நாடு எல்லையில் இந்த கிராமம் உள்ளதால் குடிநீர் வசதி செய்து தர கோரி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. அதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உட்பட வட்டார வளர்ச்சி துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை குடிநீர் இணைப்பு தரப்படவில்லை.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: நாங்கள் வசிக்கும் பகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பகுதியாக உள்ளது. ஆனால் இரண்டு மாநில எல்லையில் எங்கள் கிராமம் இடம் பெற்றுள்ளதால் குடிநீர் குழாய் இணைப்பிற்கான குழாய்கள் எப்படி போடுவது என தெரியாமல் குடிநீர் இணைப்பு கொடுக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். எங்களுக்கு தேவையான குடிநீரை 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குளத்தில் இருந்து எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது.

வெயில் காலங்களில் அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் குடிநீருக்காக அவ்வப்போது இரண்டு கிராமங்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. புதுச்சேரி மாநில கிராம மக்கள் எங்களை தாக்கி விரட்டுகின்றனர். இது குறித்து திட்டச்சேரி காவல் நிலையத்தில் பல புகார்கள் பதிவாகியுள்ளது. இதனால் வேறு வழியின்றி அவசர தேவைக்காக அருகில் உள்ள வள்ளுவன் குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து பாத்திரம் தூய்மை செய்வது, துணிகள் துவைப்பது போன்றவைகளுக்கு பயன்படுத்துகிறோம்.

சில நேரங்களில் அந்த தண்ணீரை காய்ச்சி குடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். காவல் நிலையங்களில் தான் எல்லை பிரச்னை வரும். ஆனால் குடிநீருக்கு எல்லை பிரச்னை நிலவிவருவது வேதனையாக உள்ளது. எனவே எல்லை பிரச்னை பார்க்காமல் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றனர்.

The post எல்லை பிரச்னையால் குடிநீர் இணைப்பு இன்றி தவிக்கும் கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Puducherry ,Tamil Nadu ,Kallikattu Polakam ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்