×

நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை நூதன முறையில் விரட்டும் விவசாயிகள்

சிவகங்கை : நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை விரட்ட வயல்களில் பாட்டில்களை கட்டி வைத்து விவசாயிகள் புதுயுக்தியை கடைப்பிடித்து வருகின்றனர்.

சிவகங்கை அருகே மாங்குடி, வைரவன்பட்டி, பெரியகோட்டை, தெக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நேரத்தில் அப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிகம் சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் காட்டு பன்றிகளை விரட்ட வயல்கள் சிறிய குச்சிகளில் வெள்ளை நிற சாக்குகள் கட்டி வைத்துள்ளனர்.

மேலும் வயல் முழுவதும் சேலைகளை கட்டி வைத்துள்ளனர். இருந்தாலும் பன்றிகள் தொல்லை குறையவில்லை. இதனால் விவசாயிகள் சில நேரங்களில் வெடிவைத்து விரட்டியும் சத்தம் எழுப்பியும் காட்டுப் பன்றியினை விரட்டுகின்றனர். ஆனாலும் நள்ளிரவில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக நெல் வயல்களில் இறங்கி நெற்பயிர்களை சேதப்படுத்துகிறது.

இந்த நிலையில் பெரியகோட்டை தெக்கூர் பகுதியில் நெல் வயல்களின் வரப்புகளில் சிறிய குச்சிகளை ஊன்றி அதன் மீது மூன்று பாட்டில்களை கட்டி வைத்து அது ஒன்றோடு ஒன்று உரசும் போது ஏற்படும் சத்தம் மூலம் காட்டு பன்றிகளை விரட்டும் புதிய யுக்தியை விவசாயிகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

விவசாயி ரமேஷ் கூறியதாவது: தற்போது நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் நெல் வயல்களில் இறங்கி நெற்பயிர்களை முழுவதுமாக காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்தோம். அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் நெற்பயிர்களை சேதப்படுத்துவதால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

காட்டு பன்றிகளை விரட்ட நாங்களும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். நெல் வயல்கள் முழுவதுமாக சேலையை கட்டி வைத்துளோம். பன்றிகளை விரட்ட இதுபோல பாட்டில் கட்டி வைத்து அது ஒன்றோடு ஒன்று உரசும் போது சத்தம் வருகிறது. அந்த சத்தத்தின் மூலமாக அது ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் நெல்வயல்களில் பாட்டில்களை கட்டி வைத்துள்ளோம் என்றார்.

The post நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை நூதன முறையில் விரட்டும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Mangudi ,Vairavanpatti ,Periyakottai ,Tekur ,Sivaganga ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்