கூடலூர், பிப். 23: கம்பம்மெட்டு மலைச்சாலையில் நேற்று காலை வைக்கோல் ஏற்றிச்சென்ற சரக்கு வேன் கவிழ்ந்ததில், ஒருவர் பலியானார்; இருவர் காயமடைந்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கம்பம் ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனது சரக்கு வேனில் உசிலம்பட்டியில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு, கேரள மாநிலம், கம்பம்மெட்டு அருகே உள்ள மந்திப்பாறைக்கு நேற்று அதிகாலை சென்றார். அவருடன் உதவியாளராக கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த ராமர் மகன் நல்லதம்பி (45) மற்றும் ரமேஷ் ஆகியோர் சென்றனர்.
கம்பம்மெட்டு மலைச்சாலையில் 15வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் வைக்கோலுடன் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில், வேனில் ஓரமாக அமர்ந்து வந்த நல்லதம்பி வாகனத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். பாக்கியுள்ள 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற கம்பம் போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காகவும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மலைச்சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நின்றன. இதனால், காலையில் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கம்பம்மெட்டு மலைச்சாலையில் சரக்கு வேன் கவிழ்ந்து ஒருவர் பலி: 2 பேர் காயம்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.