×

சட்டமன்றம் கட்ட கவர்னர் தடை- சபாநாயகர் குற்றச்சாட்டு அதெல்லாம் ஒன்றுமில்லை- முதல்வர் ரங்கசாமி மறுப்பு தமிழிசை முன்னிலையில் பரபரப்பு பேட்டி

புதுச்சேரி, பிப். 23: புதுச்சேரியில் தற்போதுள்ள சட்டமன்றம் 200 ஆண்டுகால பழமை வாய்ந்த பிரெஞ்ச் பாரம்பரிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தட்டாஞ்சாவடி பகுதியில் ஒருங்கிணைந்த புதிய சட்டமன்ற வளாகம் கட்டுவதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசின் நிதி பெறும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு உடனடியாக அனுமதி கொடுத்து கோப்பை ஒன்றிய அரசுக்கு அனுப்பவில்லை.

இதனால் கடந்த 5 மாதங்களாக கிடப்பில் கிடப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் நிருபர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், புதிய சட்டமன்றம் கட்டுவது தொடர்பான கோப்பு, உரிய காரணமில்லாமல் கடந்த 5 மாதங்களாக துணைநிலை ஆளுநர் மாளிகையில் முடங்கி கிடப்பதாக குற்றம் சாட்டினார். தற்போதுள்ள சட்டமன்ற கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் பலவீனமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழிசை, மக்கள் வரிப்பணம் வீணாகக்கூடாது என்பதற்காக, கூடுதல் செலவீனம் குறித்து கோப்பில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கோப்பை கிடப்பில் போடவில்லை என தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, சபாநாயகர் செல்வம் ஆகியோருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அறையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் 100 சதவீதம் ஒன்றிய அரசின் நிதியுதவி மூலம் புதிய சட்டசபை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது வரை ஒப்புதல் கிடைக்கவில்லை. 5 மாதங்களாக அந்த கோப்பு கிடப்பில் உள்ளது. இது தொடர்பாக 50க்கும் மேற்பட்ட முறை நான் நேரில் சந்தித்து துணை நிலை ஆளுநரிடம் வலியுறுத்தினேன்.

அப்போதும் அந்த கோப்பு பரிசீலனையில் இருப்பதாகவே கூறி வந்தார். கோப்புக்கு உடனே ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு துணைநிலை ஆளுநர் அனுப்பி இருக்கலாம். ஆனால் அதனை விடுத்து செலவினம், கட்டுமானம், ஹெலிகாப்டர் தளம் என விளக்கங்களை கேட்கிறார். இதனால் தேவையற்ற காலதாமதம் ஆகிறது. உள்துறை அமைச்சகம் சார்பில் துணை நிலை ஆளுநர் விளக்கம் கேட்கிறாரா? என்று தெரியவில்லை. உள்துறை அமைச்சகத்துக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், தலைமை செயலருக்குத்தான் அனுப்பியிருப்பார்கள். உள்துறைக்கு அனுப்பாமலே விளக்கம் கேட்கிறேன் என்ற பெயரில் காலதாமதப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? தற்போதுள்ள சட்டமன்றம் மிகப் பழமையான சட்டமன்றம். கட்டிடத்தின் நிலைமை அனைவருக்கும் நன்றாக தெரியும்.

முன்பே ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருந்தால், ஒரு இறுதி முடிவுக்கு இந்நேரம் வந்திருக்கலாம். அதனால்தான் கூறுகிறேன், புதிய சட்டமன்றம் கட்டுவதற்கு துணைநிலை ஆளுநர் தடையாக இருக்கிறார். இது தொடர்பாக தேவைப்பட்டால், உள்துறை அமைச்சரிடம் புகார் செய்வோம். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இது போன்ற விவகாரம் பாஜக வேட்பாளருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை துணை நிலை ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும், என்றார். இதற்கிடையே பழைய துறைமுகம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நகர பொழுது போக்கு மையத்தை கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். அப்போது, புதிய சட்டமன்றம் கட்டுவதற்கு நீங்கள் தடையாக இருப்பதாக சபாநாயகர் கூறியிருப்பது குறித்து தமிழிசையிடம் கேட்டனர். அப்போது அருகில் இருந்த முதல்வர் ரங்கசாமி குறுக்கிட்டு, அதெல்லாம் ஒன்றுமில்லை. புதிய சட்டமன்றம் கட்டும் போது கட்டப்படும் என கடுகடுப்புடன் பதிலளித்தார். சட்டசபை கட்டும் விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் நேரடியான மோதல் போக்கு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சட்டமன்றம் கட்ட கவர்னர் தடை- சபாநாயகர் குற்றச்சாட்டு அதெல்லாம் ஒன்றுமில்லை- முதல்வர் ரங்கசாமி மறுப்பு தமிழிசை முன்னிலையில் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangaswamy ,Tamilisai ,Puducherry ,Legislative Assembly ,Puducherry government ,Thattanjavadi ,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி