×

கல்வராயன்மலையில் பதுங்கியிருந்த தமிழகம், புதுவையை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது உல்லாச வாழ்க்கை நடத்தியது அம்பலம்

புதுச்சேரி, பிப். 23: புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்தவர் பாலமுருகன்(40). ஆரியப்பாளையம் பைபாஸ் அருகே இவருக்கு சொந்தமான பேக்கரி கடை உள்ளது. கடந்த 2ம் தேதி கடையை உடைத்து பண பெட்டியில் இருந்த ரூ.2 லட்சத்தை மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்றார். அடுத்தடுத்த நாட்களில் மூப்பனார் காம்ப்ளக்சில் உள்ள சேகரின் காபி கடை மற்றும் சுரேஷின் மெடிக்கல் உடைக்கப்பட்டு, அங்கிருந்த ரூ.1.20 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து கடையின் ஷெட்டரை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று பண பெட்டியை திறந்து அதிலிருந்த பணத்தை மூட்டை கட்டி தூக்கி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. பிறகு போலீசார் தடவியியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

அதே பேக்கரி கடையில் மீண்டும் கடந்த 12ம் தேதி பணம் கொள்ளை போனது. அங்குள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது அதே ஆசாமி முகமூடி அணிந்து கடையை உடைத்து கைவரிசை காட்டியது உறுதியானது. இதையடுத்து அந்த நபர் பைக்கில் எந்த பகுதிக்கு தப்பிச் செல்கிறார், என்பதை கண்டறிய அவரது பைக் செல்லும் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஒவ்வொன்றாக போலீசார் ஆய்வு செய்தனர். அதாவது பாலமுருகனின் பேக்கரி கடையில் இருந்து அந்த பைக் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அங்கனூர் வரை செல்லும் காட்சிகளை கண்டறிந்து இடத்தை அடையாளம் கண்ட தனிப்படையினர் அங்குள்ள போலீசாரின் உதவியை நாடினர்.

அப்போது அங்கனூர் பகுதியில் பணம், நகை திருட்டுகளில் கை தேர்ந்தவர்கள் 15க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும், அவர்களின் விவரத்தையும் கொடுத்ததாக தெரிகிறது. அதை பெற்று கொண்ட தனிப்படையினர் அங்கனூரில் முகாமிட்டு விசாரித்தனர். அப்போது அங்கனூர் மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் அய்யப்பன் (24) என்பவர் மட்டும் அங்கிருந்து மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போன் நம்பரை கேட்டறிந்த போலீசார், டவர் லொக்கேசன் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டறியும் நடவடிக்கையில் இறங்கினர்.

செல்போன் நம்பரானது கல்வராயன்மலை பகுதியை காட்டவே, மாறுவேடத்தில் அங்கு சென்ற தனிப்படையினர், அப்பகுதியில் மறைவான இடத்தில் சுற்றி திரிந்த அய்யப்பனை மடக்கினர். பின்னர் அவரை அங்குள்ள காவல் நிலையம் அழைத்துவந்து அதிரடியாக விசாரித்தனர். அப்போது தனது அண்ணன் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து திருட்டு தொழிலை கற்றுக் கொண்டதும், அவர்களில் சிலர் சிறை சென்றுவிட்ட நிலையில் தனியாக வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழகம், புதுச்சேரியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பூட்டுகளை உடைத்து நகை, பணத்தை மட்டுமின்றி விலை உயர்ந்த பைக்குகளையும் திருடியது தெரிய வந்தது. தமிழகத்தில் திருச்சி, கரூர், சேலம், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட அய்யப்பனுக்கு புதுச்சேரியிலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வேண்டுமென எண்ணம் தோன்றியுள்ளது.

இதற்கான திட்டங்களை வகுத்த அய்யப்பன், சம்பவத்தன்று புதுச்சேரி வில்லியனூர் உள்ளிட்ட சில பகுதிகளில் முகாமிட்டு கடைகளை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளார். மேலும் விலையுயர்ந்த பைக்குகளையும் திருடி உள்ளார். இவை தனிப்படை போலீசாரின் விசாரணையில் அம்பலமான நிலையில், போலீசில் பிடிபடாமல் இருக்க இரவில் திருட்டு தொழிலை வாடிக்கையாக கொண்டிருந்த அய்யப்பன், பகலில் கல்வராயன்மலையில் காட்டு பகுதிக்கு சென்று பதுங்கியிருந்ததையும் ஒப்புக் கொண்டார்.

கொள்ளையடித்த பணத்தில் விலையுயர்ந்த பைக் வாங்கி ஆடம்பரமாக உலா வந்ததோடு, சிறையில் இருக்கும் தனது அண்ணனை ஜாமீனில் வெளியே கொண்டுவர வக்கீல் செலவு, கூட்டாளிகளுடன் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து விலை உயர்ந்த பைக், ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகம், புதுச்சேரியை கலக்கிய பிரபல கொள்ளையனை ஓரிரு வாரத்தில் போலீசார் கைது செய்துள்ள நிலையில், சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு டிஜிபி னிவாஸ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

The post கல்வராயன்மலையில் பதுங்கியிருந்த தமிழகம், புதுவையை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது உல்லாச வாழ்க்கை நடத்தியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Ambalam ,Kalvarayanmalai, Tamil Nadu ,Puduvai ,Puducherry ,Balamurugan ,Willianur, Puducherry ,Ariyapalayam bypass ,
× RELATED பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம்...