×

ஆத்திசூடியை 2 நிமிடத்தில் சொல்லி அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

பொன்னேரி, பிப். 23: பழவேற்காடு அருகே ஆத்திச்சூடி, வரைபட கலையில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பழவேற்காடு அருகே தாங்கல் பெரும்புலம் கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கூலித்தொழில் செய்யும் இக்கிராம மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுதான் கடைகளில் வாங்கிவர முடியும். மேலும், வெளியூர் செல்ல பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் செல்லவும் இவ்வளவு தூரம் சென்றுதான் பயணிக்க வேண்டும்.

அப்பகுதியில், ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுதான் பாடம் நடத்த முடியும். இவ்வளவு கடினமான சூழலில், இப்பள்ளியில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 15 மாணவ, மாணவிகள் ஆத்திசூடியின் 109 பாடல்களை 2 நிமிடங்களுக்குள் கூறி அசத்துகின்றனர். அதேபோன்று, தமிழ்நாடு வரைபடத்தில் உள்ள 38 மாவட்டங்களையும் 2 நிமிடங்களில் எழுதிடவும், மாவட்டம் பெயர் கூறினால் எங்கு உள்ளது என சுட்டிக்காட்டவும், கேட்கும்போது மாவட்டம் பெயர்களை கூறுவும் செய்கின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் கல்பனா மற்றும் உதவி ஆசிரியர் பவானி ஆகியோர் அளித்த பயிற்சி காரணமாக, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர் ராம்ராஜ், இடைநிலை ஆசிரியர்கள் காளாஞ்சி மகேந்திரன், மகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களின் திறன்களை நேரில் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். பின்னர், ஆத்திசூடி மற்றும் தமிழ்நாடு வரைபடத்தின் பெயர்களை கூறி அசத்திய 15 மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள், திருக்குறள் மற்றும் உலக வரைபட புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆத்திசூடியை 2 நிமிடத்தில் சொல்லி அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Athisoodi ,Bonneri ,Atchichudi ,Palavekadu ,Thangal Perumupulam ,Palavekadu, Ponneri, Tiruvallur district ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி