×

நெகிழி, மீண்டும் மஞ்சப்பை குறித்து நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு: மாவட்ட கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர், பிப். 23: நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், மீண்டும் மஞ்சப்பை குறித்து நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்கவும் பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்கவாக்க தமிழக முதலமைச்சர் 23.12.21 அன்று “மீண்டும் மஞ்சப்பை” என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை குறைக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கடை, கடையாக சென்று பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர். இதனால் பொதுமக்கள் வீட்டிலிருந்தே மஞ்சப் பை அல்லது மஞ்சப்பைக்கு நிகரான பையை கொண்டு வந்து பொருட்களை வாங்கி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒருங்கிணைப்புடன் ‘ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்கள் மீதான தடை மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு’ குறித்து அரசு பள்ளிகளில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில், திருவள்ளூர், பூண்டி, திருவாலங்காடு, கடம்பத்தூர், திருத்தணி, இரா.கி.பேட்டை, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, எல்லாபுரம் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் ஒரு நிலையிலும், 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு இரண்டாம் நிலையிலும், 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு மூன்றாம் நிலையிலும், என மூன்று நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல் பரிசு ₹700, 2ம் பரிசு ₹500 மற்றும் 3ம் பரிசு ₹400 வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர், த.மணிமேகலை, உதவி பொறியாளர்கள் கி.ர.லேகா, சு.சபரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மஞ்சப்பைகளை வழங்கினார்.

The post நெகிழி, மீண்டும் மஞ்சப்பை குறித்து நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு: மாவட்ட கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Manjapai ,District Collector ,Thiruvallur ,Tamil Nadu ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...