×

சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த மூடிக்கிடக்கும் புறக்காவல் நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்: போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

காஞ்சிபுரம், பிப்.23: காஞ்சிபுரத்தில் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மூடிக்கிடக்கும் புறக்காவல் நிலையங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் நகரில், விஷ்ணு காஞ்சி, சிவகாஞ்சி மற்றும் காஞ்சி தாலுகா என 3 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் எல்லை பகுதிகளில், ஏராளமான குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, குற்ற சம்பவங்களை குறைக்கவும், வாகன தணிக்கையில் ஈடுபடவும், பேருந்து நிலையம், பொன்னேரிக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

இந்த புறக்காவல் நிலையங்கள் செயல்பாட்டில் இல்லாததால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. பல்லவர் மேடு புறக்காவல் நிலையம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக அறியப்படும். பல்லவர் மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், அப்பகுதியில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கவும், அங்கு 24 மணி நேரமும் போலீசார் உள்ளவாறு புறக்காவல் நிலையம் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அப்போதைய போலீஸ் எஸ்பி சுதாகர் உத்தரவின்பேரில், சிவகாஞ்சி காவல் நிலையம் மூலம் புறக்காவல் நிலையம் பல்லவர் மேட்டில் அமைக்கப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. சில நாட்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்த புறக்காவல் நிலையம் செயல்படாமல் முடங்கியதால் குற்ற சம்பவம் நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பேருந்து நிலைய புறக்காவல் நிலையம்: காஞ்சிபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம், தற்போது மூடப்பட்டு கிடக்கிறது. பேருந்து நிலைய வளாகத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தபோது, இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் குறைந்திருந்தது. காவல்துறையினர் இங்கு பணியில் இருந்து கண்காணித்து வந்ததால் சமூக விரோதிகளின் குற்றச்செயல்களும் குறைந்தே காணப்பட்டன. இந்நிலையில், தற்போது இப்புறக்காவல் நிலையத்தில் பல நேரங்களில் போலீசார் இல்லாமல் பூட்டிக்கிடப்பதாக கூறப்படுகிறது. மேலும், குற்ற செயல்கள் அதிகளவில் நடைபெறாமல் தடுக்க, புறக்காவல் நிலையத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பேருந்து நிலையத்திற்குள் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டால் குற்ற செயல்கள் கட்டுக்குள் வரும்.

பொன்னேரிக்கரை புறக்காவல் நிலையம்: காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தின், புறக்காவல் நிலையத்தை, அப்போதைய மாவட்ட கலெக்டர் பொன்னையா, பொன்னேரிக்கரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திறந்து வைத்தார். தனியார் நிறுவன பொது நிதியில், காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய இக்கட்டடத்தை, மாவட்ட கலெக்டர் பொன்னயா, எஸ்பி சந்தோஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த, புறக்காவல் நிலையம் பயன்பாட்டில் உள்ளதால், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குற்ற செயல்கள் ஓரளவு கட்டுக்குள் உள்ளது.

இதேபோன்று, காஞ்சிபுரத்தின் பிரதான பகுதியான காந்தி சாலை மற்றும் ஏனாத்தூர், புஞ்சையரசன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கை மற்றும் குற்ற செயல்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையங்கள் முழுமையாக செயல்பாட்டில் இல்லை. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ள புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அமோகமாக விற்பனையாவதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே, திறக்கப்பட்ட புறக்காவல் நிலையங்களை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது இப்புறக்காவல் நிலையத்தில் பல நேரங்களில் போலீசார் இல்லாமல் பூட்டிக்கிடப்பதாக கூறப்படுகிறது. மேலும், குற்ற செயல்கள் அதிகளவில் நடைபெறாமல் தடுக்க, புறக்காவல் நிலையத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பேருந்து நிலையத்திற்குள் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டால் குற்ற செயல்கள் கட்டுக்குள் வரும்.

The post சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த மூடிக்கிடக்கும் புறக்காவல் நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்: போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Vishnu Kanchi ,Sivakanchi ,Kanchi taluka ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு