×

அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் மூலதன செலவு ரூ.16,732 கோடி கடும் நிதி நெருக்கடியிலும் மூன்றே ஆண்டுகளில் மூலதனச் செலவு ரூ.26,613 கோடியாக உயர்வு: எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் மூலதன செலவு ரூ.16,732 கோடி மட்டுமே உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடும் நிதி நெருக்கடியிலும் மூலதன செலவு ரூ.59,681 கோடியாக உயர்த்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடிக்கு பதிலளித்து பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: பொருளாதாரத்தைப் பற்றியும், நிதி மேலாண்மை பற்றியும் எந்த ஒரு அடிப்படை புரிதலும் இல்லாமல், பரபரப்பை உருவாக்கும் ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சியினர் அரசின் கடன் அளவைப் பற்றி தவறான கருத்துகளை முன்வைத்துள்ளனர். நிதிக்குழுவின் வரம்புக்குள் தான் கடன் வாங்குகிறோம். ஒன்றிய அரசு நம் நிதிநிலையைப் பாதிக்கும் வகையில் செயல்படாமல் இருந்தாலே, நமது கடன் இந்த ஆண்டு சுமார் ரூ.26,117 கோடியும், அடுத்த ஆண்டு ரூ.26,442 கோடி அளவுக்கும் குறைந்திருக்கும். அதைப்போன்று, எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது, மூலதன செலவுகளைப்பற்றி கேட்டார்.

10 ஆண்டு கால ஆட்சியில் அவர்கள் செய்துள்ள மூலதனச் செலவு 16,732 கோடி ரூபாய் மட்டும் தான் உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, கடும் நிதி நெருக்கடியிலும்கூட, நாங்கள் மாநிலத்தினுடைய வளர்ச்சியை கூட்டுவதற்காக, இந்த 3 ஆண்டுகளில் ரூ.33,068 கோடியாக இருந்ததை ரூ.12,000 கோடி சென்னை மெட்ரோ திட்டத்திற்காக நாம் அளித்தது உட்பட, அதையும் சேர்த்து பார்ப்பீர்களென்றால், ரூ.59,681 கோடியாக உயர்த்தி, இப்பணிகளை நாம் செய்து வருகிறோம். மூன்றே ஆண்டுகளில் மூலதனச் செலவை ரூ.26,613 கோடியாக நாம் உயர்த்தியிருக்கிறோம்.

அவர்கள் மூலதனச் செலவை உயர்த்தாமல் சென்றிருக்கக்கூடிய அந்த ஆண்டுக்கும் சேர்த்து, வருங்காலத்தில் நாங்கள் வரவு-செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுகளுக்கான அதிக ஒதுக்கீடுகளை செய்து நம்முடைய மாநிலத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம். மூலதனச் செலவுகளைப் பொறுத்தமட்டில, தற்போது, ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் சென்னை, ரூ.10,740 கோடி மதிப்பீட்டில் கோவை மற்றும் ரூ.11,368 கோடி மதிப்பீட்டில் மதுரை போன்ற மாநகராட்சிகளில் மெட்ரோ ரெயில் திட்டங்கள், நாமக்கல், பெரம்பலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், மொத்தமாக ரூ.9,535 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சாலை மற்றும் பாலங்கள் மேம்பாட்டிற்காக ரூ.17,890 கோடி, போக்குவரத்துத் துறைக்கு ரூ.2,966 கோடி என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ஆண்டு, தொடர்ச்சியாக 2 பேரிடர்களைச் சந்தித்ததால், 20.61 சதவீதம் என எதிர்பார்த்த வருவாய் வளர்ச்சி 13.26 சதவீதமாகக் குறைந்துள்ளது. வரி வருவாயின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்குடன் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் மூலதன செலவு ரூ.16,732 கோடி கடும் நிதி நெருக்கடியிலும் மூன்றே ஆண்டுகளில் மூலதனச் செலவு ரூ.26,613 கோடியாக உயர்வு: எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Minister ,Thangam ,Southern ,Edappadi ,CHENNAI ,DMK ,Tangam ,Southern government ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி