×

தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்கூட கர்நாடகாவால் வைக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன் உறுதி அதிமுக வெளிநடப்பு

தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதூவில் ஒரு செங்கல்கூட கர்நாடகாவால் எடுத்து வைக்க முடியாது என்று பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கர்நாடக முதல்வர் சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு, தமிழக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேகதாது அணை கட்டினால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராது, வறண்டு விடும். 20 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த முடிவை எடுத்ததற்காக காவிரி நீர்வள ஆணையத்திற்கு என்ன செய்தி அனுப்பியுள்ளீர்கள் என்று தெரியவில்லை. இதுபற்றி சட்டமன்றத்தில் தெரிவிப்பீர்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது 50 ஆண்டு கால பிரச்னை. காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து, பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். நாம் அலட்சியமாக இருந்தால் மேகதாதுவில் அணை கட்டிவிடுவார்கள் என்றார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஜி.கே.மணி (பாமக), வானதி சீனிவாசன் (பாஜ), ஜவாஹிருல்லா (மமக), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரும் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், பிப்ரவரி 1ம் தேதி நடந்தது. மேகதாது அணை கட்டக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம். அதன்பேரில் இந்த பிரச்னை குறித்து பேசக்கூடாது என்று சொன்னார்கள். இருந்தாலும், அன்றைக்கு இந்த பிரச்னையை எடுத்து எல்லோரையும் பேச அனுமதித்தனர். அப்போது கர்நாடகா, மேகதாது அணை குறித்து பேசியது.

ஆனால் மேகதாது அணை கட்டக்கூடாது என்று தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் ஒன்றிய அரசும் இந்த தீர்மானத்துக்கு எதிராக பேசி, இதை திருப்பி அனுப்பிவிடலாம் என்று கூறியது. கர்நாடகா மட்டும் இந்த தீர்மானத்தை ஆதரித்தது. எந்த ஆணைய தலைவர் திருப்பி அனுப்பலாம் என்று அந்த கூட்டத்தில் சொன்னாரோ, அவரே பின்னர் திட்டக் குறிப்பேட்டில் (மினிட்) மேகதாது அணை தொடர்பாகவும், அதில் உள்ள தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்தும் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இந்த குறிப்பேடு வந்தவுடன் தமிழகம் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மெயில் அனுப்பி விட்டோம். நீதிமன்றம் செல்ல இருக்கிறோம். தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் மேகதாது அணை கட்ட, ஒரு செங்கல் கூட கர்நாடகாவால் எடுத்து வைக்க முடியாது என்று ஆணித்தரமாக சொல்கிறேன். ஆனால், கட்டியே தீருவோம் என்று கர்நாடகா அரசு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கினாலும், வீரவசனம் பேசினாலும், இதற்கு தமிழகத்தில் ஆட்சியில் உள்ள யாரும் அனுமதிக்க மாட்டார்கள். உங்களுக்கு (அதிமுக) இந்தப் பிரச்னையில் எவ்வளவு வேகம், அக்கறை, ஆர்வம் இருக்கிறதோ, அது எங்களுக்கும் இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி: இந்த பொருள் குறித்து காவிரி ஆணைய கூட்டத்தில் பேசியது தவறு. ஆனால் தமிழக அரசு, வேண்டும் என்றே அமைதியாக இருந்து விட்டது. தற்போது அமைச்சர் கூறும் பதில் எங்களுக்கு திருப்தியாக இல்லாததால் வெளிநடப்பு செய்கிறோம். (அதன் பின்னர் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்)
அமைச்சர் துரைமுருகன்: அதிமுக ஆட்சியில் இருந்தவரை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவரே நியமிக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தபின்னர்தான் தலைவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பிரச்னை தொடர்பாக பிரதமருக்கும், துறை அமைச்சருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். அதன்பின்னர்தான் தலைவர் நியமிக்கப்பட்டார். இப்போது அதிமுகவினர் ஒரு நாடகத்தை நடத்தி விட்டு வெளியே போயுள்ளனர்.

வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பேட்டி
சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: காவிரி மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு அப்பாற்பட்டு நடந்து கொண்டது குறித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு சென்றிருந்தால் தமிழக விவசாயிகள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். அந்த சட்டப் பணிகளை செய்ய திமுக அரசு தவறி விட்டது. எனவே இதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம். விரைவில் இது குறித்து எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து போராட்டம் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்.

The post தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்கூட கர்நாடகாவால் வைக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன் உறுதி அதிமுக வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Meghadatu ,Tamil Nadu ,Minister ,Duraimurugan ,AIADMK ,Durai Murugan ,Assembly ,Meghadadu ,Leader of ,Opposition ,Edappadi Palaniswami ,Meghadatu Dam ,Karnataka Chief Minister's Assembly ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...