×

9 முதல் 12ம் வகுப்புகளுக்கு அறிமுகம் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் புதிய நடைமுறை: சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடெல்லி: சிபிஎஸ்இயின் நிர்வாக குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்தது. இதில், புத்தகத்தை வைத்து தேர்வு எழுதும் நடைமுறையை சோதித்து பார்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வரும் கல்வியாண்டில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் இந்த முயற்சியை சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சிபிஎஸ்இ 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களும், 11, 12ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களும் புத்தகத்தை திறந்து வைத்து தேர்வு எழுதும் நடைமுறையின் கீழ் கொண்டு வரப்படும். இந்த நடைமுறை பொதுத்தேர்வுகளில் கடைபிடிக்கப்படாது. பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டு அதன்படி அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்’’ என்றனர்.

இதன்படி, மாணவர்கள் தங்களின் புத்தகம், நோட்டு, பிற பாட சம்மந்தமான பொருட்களை தேர்வுக்கு எடுத்துச் செல்லலாம். இத்தேர்வு முறையில், பாடங்களை மனப்பாடம் செய்வதற்கு பதிலாக ஆழமாக ஆய்வு செய்து, சிக்கல்களை தீர்க்கும் திறன்களை மதிப்பிடும் வகையில் வினாத்தாள்கள் அமைந்திருக்கும்.

பாடங்கள் குறித்து விரிவான புரிதல் இருக்க வேண்டுமென்பதால் மனப்பாடம் செய்து எழுதுவதை விட இத்தேர்வு முறை கடினமாக இருக்கும். இதற்கு முன், 2014-15 முதல் 2016-17 வரை 3 ஆண்டுகள் இதே போன்ற திறந்த புத்தக தேர்வு நடைமுறையை வேறு விதமாக சிபிஎஸ்இ சோதனை முறையில் மேற்கொண்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்மறையான கருத்துகள் தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

The post 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு அறிமுகம் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் புதிய நடைமுறை: சிபிஎஸ்இ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CBSE ,New Delhi ,Dinakaran ,
× RELATED சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 20ம் தேதிக்கு பிறகு வெளியாகும்?