×

100 அடிக்கு மேல் வளர்ந்து பலன் தரும் அய்யம்பாளையம் நெட்டை தென்னைக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நிதி ஒதுக்கீடு: வேளாண் அமைச்சர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் பகுதியில் 100 அடிக்கு மேல் வளர்ந்து பலன் தரும் நெட்டை ரக நாட்டு தென்னைக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என சட்டமன்றத்தில் வேளாண் அமைச்சர் அறிவித்துளார். இதனால், இப்பகுதி தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், எம்.வாடிப்பட்டி, மருதாநதி அணை, கோம்பை, சித்தரேவு, கதிர்நாயக்கன்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, நெல்லூர், சிங்காரக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் தென்னந்தோப்புகள் உள்ளன. இவைகளில் பெரும்பாலும் நாட்டு ரக நெட்டை தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன.

குறிப்பாக அய்யம்பாளையம் பகுதியில் இந்த வகை தென்னை மரங்கள் அதிகமாக உள்ளன. இந்த தென்னைக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் திமுக அரசின் 4வது வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் நெட்டை தென்னைக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவித்தார். இதனால், அய்யம்பாளையம் உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு: இது குறித்து அய்யம்பாளையம் தென்னை விவசாயி ரசூல் முகைதீன் கூறியதாவது: விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புவிசார் குறியீடு பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அய்யம்பாளையம் தென்னைக்கு புவிசார் குறியீடு பெறுவதன் மூலம் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் தேங்காய் மற்றும் அதுசார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதியாகும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

தமிழக அரசுக்கு நன்றி: விவசாயி எம்.ஜி.இராமச்சந்திரன் கூறுகையில், ‘இப்பகுதியில் உள்ள நெட்டை ரக தென்னை மரங்கள் பழமை வாய்ந்ததாகும். இதன் பெருமையை உலகறியச் செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பகுதியில் ரசாயன கலப்படம் இல்லாமல் கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் வெயிலில் உலர வைத்து, அதனை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பி வருகின்றனர். அய்யம்பாளையம் தென்னை விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்’ என்றார்.

The post 100 அடிக்கு மேல் வளர்ந்து பலன் தரும் அய்யம்பாளையம் நெட்டை தென்னைக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நிதி ஒதுக்கீடு: வேளாண் அமைச்சர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ayyampalayam ,Pattiveeranpatti ,Minister ,Agriculture ,Dindigul ,Dinakaran ,
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...