×

முதல் ஆறு மாதம் தாய்ப்பால்தான் குழந்தைக்கான உணவு!

நன்றி குங்குமம் தோழி

‘‘அழுகை மட்டுமே பிறந்த குழந்தைகளின் மொழி. இவர்களுக்கு பசி, கோபம், அசௌகரியம் என எது ஏற்பட்டாலும் தங்களின் அழுகையால் மட்டுமே வெளிப்படுத்துவார்கள். அதனால் அவர்களை கொஞ்சம் அக்கறையுடன் பார்த்துக் கொள்வது அவசியம்’’ என பேசத் துவங்கினார் ஜெயஸ்ரீ ஜோதீஸ்வரன். இவர் தாய் மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு பயிற்சியாளர். தன்னுடைய ‘உயிர்மெய்’ என்ற சிகிச்சையகம் மூலம் குழந்தைகளை பராமரிப்பது, கர்ப்பிணி மற்றும் தாய்மார்களை பார்த்துக்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார். மருத்துவமனைகளில் குழந்தைகள் பராமரிப்பு பற்றி ஆலோசனைகள் வழங்கி வரும் இவர், பிறந்த குழந்தைகளையும், தாய்மார்களையும் எவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என விளக்குகிறார்.

தாய்ப்பாலின் முக்கியத்துவம்…

ஒரு பெண் மாசமாக இருக்கும் சமயத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக உணவு, பழங்கள், இரும்புச்சத்து, கால்சியம், புரோட்டீன் நிறைந்த தானியங்கள், இறைச்சி என பார்த்து பார்த்து கவனித்துக் கொள்வார்கள். ஆனால் குழந்ைத பிறந்த பிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால், இந்த உணவு சாப்பிடக்கூடாது, சாப்பிட்டால் குழந்தையின் வயிற்றுக்கு பிரச்னை, ஜீரணமாகாது மற்றும் ஒவ்வாமை ஏற்படும் என அவர்கள் அன்றாடம் சாப்பிட்ட உணவில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர். இதனால் பாதிப்பது தாய்ப்பால்தான்.

குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம். ஆனால் சிலர் தங்களின் உடல் நிலை காரணங்களால், தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து விடுவார்கள். ஒரு குழந்தைக்கு முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே உணவு என்பதால், அவர்களுக்கு அந்தக் காலம் தாய்ப்பால் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அதன் பின் படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம். ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு போதுமானது என்பதால் வேறு எந்த உணவும் தேவைப்படாது.

தாய்ப்பாலில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருப்பதால், குழந்தைகளுக்கு தண்ணீர் தனியாக கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கூட இருக்காது. ஏழாம் மாதம் முதல் தாய்ப்பாலுடன் சில உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் கொடுக்க இயலாத சூழ்நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி பவுடர் பால் (formula milk) கொடுக்கலாம். குழந்தைகளின் உடல் நிலைக்கு ஏற்ப தேவையான சத்துக்கள் மற்றும் எளிதில் ஜீரணமாகும் தன்மையுடன் அவை தயாரிக்கப்படுகிறது.

ஒரு சிலர் பவுடர் பாலுக்கு பதில் பசுமாட்டுப் பாலினை கொடுப்பார்கள். அவை மிகவும் தவறு. அந்த பால் குழந்தைக்கு அஜீரணப் பிரச்னையை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலியால் அவதிப்படுவார்கள். சில குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை மாட்டுப் பாலை தவிர்ப்பது நல்லது. மேலும் தாய்ப்பால், மாட்டுப்பால், பவுடர் பால் என மூன்றையும் மாற்றி மாற்றிக் கொடுத்தாலும், குழந்தைக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் தாய்ப்பாலை தவிர்த்து வேறு ஆகாரம் என்றால் மருத்துவரின் ஆலோசனைப் படி பவுடர் பாலை கொடுக்கலாம்.

பிறந்த குழந்தைக்கு அவ்வப்போது உடல் நிலை சரியில்லாமல் போகும். அந்த சமயத்தில் தாய்ப்பால் கொடுப்பதை ஒரு சிலர் தவிர்ப்பார்கள். அது தவறானது. குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் தன்மை தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. குழந்தைக்கு பால் கொடுக்கும் காலத்தில் தாயின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அது தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு செல்லும் போது குழந்தைக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் அல்லது இதர நோய் தொற்றுகள் விரைவில் சரியாகும். அதே சமயம் தாய்க்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கு உருவாகும் நோயெதிர்ப்பு தன்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை போல குழந்தைகளை கவசமாக பாதுகாக்கும்.

பால் குறைய காரணம்…

ஒரு பெண் கருவை சுமக்கும் காலத்தில் சத்துக்கள் நிறைந்த உணவுகள், பழங்கள் என பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். ஆனால் குழந்தை பிறந்த உடன் இதில் பாதி உணவினை தவிர்க்க ஆரம்பிப்பார்கள். இது தாய்ப்பால் சுரப்பதை பாதிக்கும். அந்த சமயத்தில் குழந்தைக்கு போதுமான பால் இல்லை என்பதால், குழந்தைக்கு மாட்டுப் பாலோ அல்லது
பவுடர் பாலோ கொடுக்க ஆரம்பிப்பார்கள். அதுதான் தவறு.

தாய்க்கு நாம் கொடுக்கும் உணவை பொறுத்துதான் அவர்களின் பாலின் தன்மை மாறுபடும். குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது சில தாய்களுக்கு lactation பிரச்னைகள் ஏற்படும். இதனாலும், குழந்தைகள் பாலை குடிக்க முடியாமல் போகலாம். மேலும், தாய்ப்பால் கொடுக்காமல் இருக்கும் போது பால் சுரக்கும் சுரப்பிகளும் பால் சுரப்பதை குறைத்துவிடும். இதன் காரணமாகவும் பாலின் அளவு குறையும் அபாயமும் உள்ளது.

குழந்தைகளை கையாளும் முறை…

பிறந்த குழந்தைகளை குளிக்க வைப்பது மிகவும் முக்கியமானது. அவர்களின் தொப்புள் கொடி விழுந்த பிறகுதான் குளிக்க வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுவரை அவர்களுக்கு டவல் பாத்தான் தரவேண்டும். குழந்தையின் தொப்புள் கொடி விழாமல் குளிக்க வைத்தால், அந்தப் பகுதியில் நோய் தொற்றை ஏற்படுத்தும். குளியல் என்பது குழந்தைகளை மகிழ்ச்சியாகவும், ரிலாக்சாகவும் வைக்கும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து சுடச்சுட ஊற்றாமல் வெதுவெதுப்பா அவர்களின் உடலிற்கு ஏற்றவாறு இருப்பது அவசியம். ஆண் குழந்தைகள் என்றால் அவர்களின் மார்பக காம்பினை அழுத்தி நீவிவிடுவதால், தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும். மேலும் கை கால்களை நீவிவிட்டு அழுத்துவது அவர்களை உடல் மற்றும் மன ரீதியாகவும் பாதிக்கும்.

குழந்தைகளுக்கு தூக்கம் மிகவும் அவசியம். அவர்கள் நன்றாக தூங்கினால்தான் ஆரோக்கியமாக இருப்பார்கள். அதற்காக எல்லா நேரமும் தூங்கிக்கிட்டே இருக்கணும் என எதிர்பார்க்கக்கூடாது. பால் குடிச்சு தூங்கும் குழந்தைகள் சிறிது நேரத்தில் எழுந்துவிட்டால், அவர்களுக்கு பால் பத்தவில்லை என்பது கிடையாது. குடித்த பால் ஜீரணம் ஆகிவிட்டது என்று அர்த்தம். நன்றாக பால் குடிக்கணும், பிறகு ஆக்டிவாக இருக்கணும்.

இதுதான் அவர்களின் அன்றாட செயல்பாடாக இருக்க வேண்டும். அதே சமயம் இவர்களுக்கு பவுடர் பால் அல்லது மாட்டுப் பால் கொடுக்கும் போது, அது எளிதில் ஜீரணமாகாமல், ஒருவித மந்த நிலையினை ஏற்படுத்தும். இதனால் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். முதல் ஆறு மாதம் தாய்ப்பால் அவசியம். அதன் பிறகு வீட்டில் சமைக்கும் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை கொடுக்கலாம். அதாவது, வேக வைத்த கிழங்கு, கேரட், ஆப்பிள், பருப்பு சாதம் மசித்து கொடுக்கலாம்’’ என்ற ஜெயஸ்ரீ, பின் தங்கிய மருத்துவ வசதி இல்லாத இடங்களில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

தாய்மார்களையும் கவனியுங்கள்…

பிரசவத்திற்கு முன் பலவகையில் கர்ப்பிணி பெண்ணை கவனித்துக் கொள்ளும் குடும்பத்தினர், பிரசவத்திற்கு பின் அவர்களின் முழு கவனத்தையும் குழந்தையின் மேல்தான் செலுத்துகிறார்கள். இதனால் தாய்மார்கள் ஒருவித மன உளைச்சலுக்கு (Postpartum psychosis) ஆளாகிறார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஒரு சிலர் இதனை சாதாரணமாக கடந்து வந்தாலும், பலர் அதிகபட்ச நிலையான தன்னைத்தானே தாக்கிக்கொள்வார்கள்.

சில சமயம் குழந்தைகளை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். எனவே குழந்தைகளை பிரசவித்த தாய்மார்களுக்கும் குழந்தைக்கும் கிடைக்கும் அனைத்து கவனிப்பும் அவசியம். அவர்களுக்கு எந்த உணவுகளையும் தவிர்க்காமல், அனைத்து சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். குறிப்பாக புரதச்சத்துள்ள உணவுகள் மேல் கவனம் செலுத்த வேண்டும். நம் முன்னோர்கள் குழந்தை பிறந்த பிறகுதான் மிகவும் சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்வார்கள்.

இது தாய்ப்பால் மூலம் குழந்தைக்கும் கிடைத்தது. ஆனால் தற்போது, இந்த பழம் சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்கும், சிறு தானியம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது என உணவு வழக்கத்தை மாற்றி விடுகின்றனர். இது பால் சுரப்பதில் பாதிப்பினை ஏற்படுத்தும். பால் கொடுக்கத் தவறினால், பால் சுரப்பதும் குறையும். அதுவும் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.

சில பெண்களுக்கு அப்படியே நேர்மாறாக இருக்கும். பால் அதிகம் சுரந்து அவர்கள் மேல் எப்போதும் ஒருவித பால் வாசனை இருந்துகொண்டே இருக்கும். அதை தவிர்க்க வாசனை திரவியங்கள், பவுடர்களை பயன்படுத்துவார்கள். அது குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதன் காரணமாகவும் அவர்கள் பால் குடிப்பதை தவிர்ப்பார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு இந்த திரவிய வாசனைகளால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, சுவாசக் கோளாறாக மாறும் அபாயமும் உள்ளது. எனவே தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதில் எந்தவித சிக்கல் நேர்ந்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதுகாப்பற்ற நிலைதான் அவர்களின் அதிகபட்ச அழுகைக்கு காரணம். அதுவே அவர்கள் தாயிடம் இருந்தால் தோன்றும் பாதுகாப்பின் காரணமாக அழுகை நின்று விடும். அதற்காகத்தான் குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போதிருந்தே குடும்பத்தினர் பேச சொல்லிடுவாங்க. குறிப்பாக அம்மா, அப்பா இருவரும் சேர்த்து பேசும் போது நன்றாக பதிந்து போகும். இதன் அட்வான்ஸ்டு முறையாக, ஒரு ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு. மரபுகளின் மூலம் குழந்தைகளுக்கு தங்களின் பெற்றோர்கள், குடும்பத்தினரை உணர முடியும், அவர்களின் குரல்களை கேட்காமலே. இது தொடர்பாக சில அறிவியல் ஆய்வாளர்கள் சில ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

The post முதல் ஆறு மாதம் தாய்ப்பால்தான் குழந்தைக்கான உணவு! appeared first on Dinakaran.

Tags : kumkum dothi ,Jayashree ,
× RELATED சைகை மொழி