×

சென்னை விமானநிலையத்தில் துபாய் செல்ல முயன்ற ஆந்திர பெண் பயணி கைது: 68 சிம்கார்டுகள் பறிமுதல்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து நேற்று துபாய் விமானத்தில் செல்ல முயன்ற ஆந்திர பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் கைப்பையில் பதுக்கி வைத்திருந்த 68 சிம்கார்டுகளையும் பறிமுதல் செய்தனர். சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் இருந்து நேற்று ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் துபாய் புறப்படுவதற்கு தயார்நிலையில் இருந்தது. இதில் செல்ல வேண்டிய பயணிகளின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டு பல்வேறு ஆவணங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த ரோஜா (40) என்ற பெண், துபாய்க்கு சுற்றுலா விசாவில் செல்வதற்கு வந்திருந்தார்.

அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அப்பெண்ணின் கைப்பையை சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர். இதில், அவரது கைப்பைக்குள் இருந்த பார்சலில் அனுமதியின்றி 68 சிம்கார்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அனைத்தும் ஒரே தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தை சேர்ந்தது. இந்த சிம்கார்டுகள் அனைத்தும் ஆக்டிவேட் செய்யப்படாமல் கவர்களில் இருந்தால் பார்சல் பெரிதாக சுங்கச்சோதனையில் கண்டுபிடித்துவிடுவர் எனக் கருதி, அனைத்து சிம்கார்டுகளையும் தனித்தனியே பிரித்து அப்பெண் எடுத்து வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அந்த ஆந்திர பெண் ரோஜாவை தனியே அழைத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்பெண், இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. சென்னை விமானநிலையத்துக்கு வந்தபோது, இந்த பார்சலை ஒருவர் மருந்துகள் எனக்கூறி என்னிடம் கொடுத்து, துபாய் விமான நிலையத்தில் ஒரு பெண் வாங்கிக் கொள்வார் எனக் கூறினார். இதை நம்பி வாங்கி வந்தேன் என்று புலம்பியுள்ளார். இதைத் தொடர்ந்து அப்பெண்ணை விமானநிலைய வளாகத்தில் அந்நபர் உங்களை எங்கு சந்தித்தார், எத்தனை மணிக்கு, இந்த பார்சலை எத்தனை பேர் கொடுத்தனர் என்று சுங்கத்துறை அதிகாரிகள் நேரில் அழைத்து சென்று சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதற்கு அப்பெண் பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார்.

அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அப்பெண் கூறியபடி யாரும் வந்து அவரிடம் பார்சலை தரவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆந்திர பெண்ணின் துபாய் பயணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர். அவரிடம் இருந்து 68 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிம் கார்டுகள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் கடத்தல் ஆசாமிகள், போலி பாஸ்போர்ட் தயாரிப்பவர்கள் மற்றும் தீவிரவாதிகள் பயன்பாட்டுக்காக எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஆந்திர பெண் ரோஜாவை கைது செய்து, மேல்விசாரணைக்காக சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். அப்பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post சென்னை விமானநிலையத்தில் துபாய் செல்ல முயன்ற ஆந்திர பெண் பயணி கைது: 68 சிம்கார்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dubai ,Chennai airport ,Meenambakkam ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்