×

இந்தியாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்..!!

கிரீஸ்: இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் விவசாயிகள் டிராக்டர்களோடு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் சுமார் 8,000 விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக கூடினர். 130 டிராக்டர்களுடன் வந்த அவர்கள் விவசாயிகள் இல்லாவிட்டால் உணவே கிடையாது என்று முழக்கங்களை எழுப்பினர். இதை போன்று விவசாயிகள் நடத்தும் போராட்டங்கள் பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து, இத்தாலி நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன.

விவசாயத்தை மேற்கொள்வதற்கான செலவுகள் பலமடங்கு அதிகரித்து விட்ட நிலையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு 60% மேல் குறைந்து விட்டதாகவும், தங்கள் வருவாயோ இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்து விட்டதாகவும் கிரீஸ் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டிலும், ஐரோப்பிய யூனியனின் வேளாண் கொள்கைகளை கண்டித்து விவசாயிகள் பெருமளவில் குவிந்தனர். கடந்த 2 வர காலத்திற்கு மேலாக ஸ்பெயின் முழுவதும் விவசாயிகள் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேட்ரிட்டில் 500க்கும் அதிக டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் பலர் தலைநகருக்கு வெளியே தடுக்கப்பட்டதால் எல்லையிலேயே அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள புதிய விதிகள் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரால் அதிகரித்து வரும் பணவீக்கம் விவசாயிகளை போராட்ட களத்திற்கு தள்ளி இருக்கிறது. பசுமை ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய யூனியன் விவசாயிகள் மீது விதித்துள்ள விதிமுறைகள் ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரிப்பால் உள்நாட்டு விளைபொருட்கள் விலையில் சரிவு போன்ற காரணங்கள் ஐரோப்பிய நாடுகளின் விவசாயிகளை கொந்தளிப்படைய வைத்திருக்கின்றன.

The post இந்தியாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Greece ,Greek ,Athens ,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...