×

நில அபகரிப்பு வழக்கு: அதிமுகவை சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி திருவாரூர் கிளை சிறையில் அடைப்பு

திருவாரூர்: நில அபகரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா திருவாரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். திருவாரூர் மாவட்டம் சேரன்குளம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி அமுதா சேரன்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவியாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், ஞானாம்பாள் மற்றும் ரோஸ்லின் என்பவரது ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அவர் இறந்து விட்டதாக கூறி போலி பாத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்துள்ளார்.

இதை தொடர்ந்து, நிலத்தை மோசடி செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 2017ல் திருவாரூர் எஸ்.பி.யிடம் ஞானாம்பாள் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகாரின் அடிப்படையில் அதிமுகவை சேர்ந்த மன்னார்குடி ஒன்றிய தலைவர் மனோகரன், அவரது மனைவி சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா, சித்ரா, ராஜேந்திரன், அய்யாதுரை, ரேவதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படாததால் 2023ம் ஆண்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கை மாற்றியும் நடவடிக்கை எடுக்காததால் சிபிசிஐடி எஸ்.பி. மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். மேலும் ஊராட்சி தலைவி அமுதாவை தகுதிநீக்கம் செய்யவும் கைது செய்து விசாரணை முடியும் வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமுதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதாவை பிப்.23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமறைவாக இருந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா திருவாரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மருத்துவ ஆவணங்களை அமுதா தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது.

The post நில அபகரிப்பு வழக்கு: அதிமுகவை சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி திருவாரூர் கிளை சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Cherankulam panchayat ,AIADMK ,Thiruvarur ,Tiruvarur ,Cherankulam ,Amutha ,Manokaran ,Tiruvarur district ,Amuda ,president ,Dinakaran ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...