×

வாரணாசி, ரேபரேலி, அமேதி தொகுதிகளை கேட்டு வாங்கியது; உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் சமாஜ்வாதி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு 63 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் தீர்வு எட்டப்படாத வரை ராகுல் காந்தியின் நியாய யாத்திரையில் பங்கேற்க போவதில்லை என சமாஜ்வாதி கட்சி பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த திங்கள்கிழமை அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்காதது இந்த சந்தேகத்திற்கு வலு சேர்த்தது.

இந்த நிலையில் லக்னோவில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர். முடிவில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட சம்மதம் தெரிவித்தது. மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கு நகர்ப்புறங்களில் உள்ள தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி, ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்த ரேபரேலி, அமேதி உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி வீட்டுக் கொடுத்தது.

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அகிலேஷ் யாதவ் 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க விரும்பியதாகவும், அதுவும் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளையே ஒதுக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அகிலேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவும் அதன் பின்னரே காங்கிரஸ் விரும்பும் தொகுதிகளை ஒதுக்க அகிலேஷ் முன்வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல கடந்த 2019ம் ஆண்டு ஸ்மிருதி ராணியிடம் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வி அடைந்ததால் அந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் ஒரு வலுவான தலைவரை களமிறக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தொகுதி பங்கீட்டில் தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு பெற்றிருப்பதால் உத்தரப்பிரதேசத்தில் இழந்த பெருமையை மீட்க வேண்டும் என்பதால் அக்கட்சி தீர்க்கமாக இருப்பது தெளிவாகிறது.

The post வாரணாசி, ரேபரேலி, அமேதி தொகுதிகளை கேட்டு வாங்கியது; உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு appeared first on Dinakaran.

Tags : Varanasi ,Raebareli ,Amethi ,Samajwadi ,Congress ,Uttar Pradesh ,Lucknow ,Congress party ,Samajwadi Party of India ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் ஓரிருநாளில் அறிவிப்பு: கார்கே தகவல்