×

2024-25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம்: 82 அறிவிப்புகளை வெளியிட்டார் மேயர் பிரியா

சென்னை, பிப்.22: 2024-25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 200 வார்டுகளிலும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்பது உள்பட 82 அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டார்.
சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மொத்தம் 82 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன் விவரம்: சென்னை மாநகராட்சியில் இருக்கும் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதற்கட்டமாக 113 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ₹5.09 கோடி மதிப்பீட்டில் ஜெனரேட்டர் கொள்முதல் செய்து வழங்கப்படும். 140 நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நல வாழ்வு மையங்களில் மின்தடை ஏற்படும் போது, தடையின்றி மருத்துவ சேவைகள் வழங்கும் வகையிலும், சிகிச்சை பெறுபவர்கள், பணியாளர்களின் பாதுகாப்பு கருதியும், மின் இன்வெர்ட்டர்கள் ₹4.20 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து அமைக்கப்படும்.
2024-25ம் ஆண்டில் சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ₹10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். இதனால் நீர்நிலைகளின் சேமிப்புத் திறன் அதிகரிப்பதால் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். நீர்நிலைகளை சுற்றி உள்ள இடங்களில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும். மாத்தூர் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள குளம் பரீட்சார்த்த முறையில் ₹8 கோடி மதிப்பீட்டில் ஸ்பாஞ்ச் பார்க்காக வடிவமைக்கப்படும். சென்னை மாநகராட்சியால் 192 மயான பூமிகள் பராமரிக்கப்படுகிறது. இந்த மயான பூமிகள் இயற்கை எழிலுடன் சுகாதாரமான முறையில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்துவதால், இறந்தவரின் இறுதி சடங்குகளில் கலந்துகொள்ளும் உற்றார், உறவினர்கள் மன அமைதியுடன் இருக்கைகளில் அமர்ந்து மன நிறைவுடன் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், மயான பூமிகள் ₹10 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும். 1 முதல் 15 மண்டல அலுவலகம் மற்றும் மூன்று வட்டார துணை ஆணையர் அலுவலகங்களில், \”தமிழ் வாழ்க\” \”தமிழ் வளர்க\” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பெயர் பலகை மொத்தம் ₹20 லட்சம் மதிப்பீட்டில் அந்தந்த மண்டல அலுவலகங்கள் மூலம் அமைக்கப்படும். 255 சென்னை பள்ளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த சின்னம் அச்சிடப்பட்ட பெயர் பலகைகள் புதிதாக அமைக்கப்படும்.

மாத்தூர் எம்.எம்.டி.ஏ, 2வது பிரதான சாலையில் ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களில் உள்ள 19 விளையாட்டுத்திடல்கள் ₹5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களுக்கு வேண்டிய சொத்துவரி மதிப்பீடுகள், பெயர் மாற்ற ஆணைகள், தொழில் உரிமங்கள் போன்ற ஆணைகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்படும். சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் / பயணிக்கும் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் இருக்கும் இடத்தை அறியும் வகையில் புதிய அலைபேசி வலைதள செயலி உருவாக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

சென்னை மாநகராட்சியில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம் ஏதும் இல்லை என்ற குறையை போக்க ஒரு வார்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் 200 வார்டுகளிலும் ₹10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் 4,750 சாலைகள் மற்றும் நடைபாதைகள் மேம்படுத்தும் பணி ₹404 கோடியில் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகராட்சி எல்லைகள் தொடங்கும் கீழ்கண்டுள்ள 5 பிரதான சாலைகளில் நுழை வாயில்கள் ₹15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். 1) கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை, 2) ஓஎம்ஆர் சாலை, செம்மஞ்சேரி, 3) ஜிஎஸ்டி சாலை, மீனம்பாக்கம், 4)மவுன்ட் பூந்தமல்லி என்.எஸ்.ஆர்.எம்.சி மருத்துவமனை 5) ஜி.என்.டி மாரியம்மாள் நகர், புழல்.

200 வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்தவும், காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வருவதற்கும், அவசியம் கருதியும் ₹1 கோடி மதிப்பீட்டில் 200 எண்ணிக்கையிலான டேப் (TAB) கொள்முதல் செய்து மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். கல்வித்துறையில் 27, பொது சுகாதாரம் 19, இயந்திர பொறியியல் துறை 8, மருத்துவ சேவைகள் திறை 1, மழைநீர் வடிகால் துறை 2, கட்டிடம் 4, பாலங்கள் 2, பூங்கா 4, வருவாய் 2, திடக்கழிவு மேலாண்மை 4, பேருந்து சாலைகள் 5, மன்றம் 3 என மொத்தம் 82 அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.

கல்வி சுற்றுலாவுக்கு பள்ளி பேருந்துகள்
சென்னைப் பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும் பொருட்டு குறைந்தபட்சம் 45 இருக்கைகள் கொண்ட நான்கு எண்ணிக்கையிலான பள்ளி பேருந்துகள் ₹1.16 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

தெரு நாய்களை கட்டுப்படுத்த இனக்கட்டுப்பாட்டு மையங்கள்
சென்னை மாநகர எல்லைக்குள் சுற்றித் திரியும் தெரு நாய்கள், பொதுமக்களை அச்சுறுத்துவது மற்றும் கடிப்பதால் ரேபிஸ் நோய் தாக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து பிடிக்கப்படும். நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதன் மூலம் நாய் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு பொதுமக்களின் நலன் காக்கப்படும். இத்திட்டத்திற்காக ₹70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தெரு நாய்களுக்கு ஏற்படும் வெறி நாய் கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் தடுக்க வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு ஆகிய வட்டாரங்களுக்கு தலா ஒன்று வீதம் மூன்று நடமாடும் கால்நடை தடுப்பூசி மருந்து செலுத்தும் வாகனங்கள் ₹60லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சென்னை மாநகராட்சியில், தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கூடுதலாக இரண்டு நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் ₹2.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

கால்நடைகளை பிடிக்க தற்காலிக பணியாளர்கள்
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கால்நடைகளை பிடிக்கும் பணிக்காக 1, 2, 3, 4, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய 9 மண்டலங்களுக்கு தலா 5 பேர் வீதம் 45 தற்காலிக பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் மூலம் நியமிக்கப்படுவார்கள். இதற்காக வருடத்திற்கு ₹1.16 கோடி தொடர் செலவினமாக இருக்கும். சென்னை மாநகராட்சியில் வளர்க்கப்படும் மாடுகளை முறைப்படுத்த போதிய இடவசதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுள்ள மாட்டு உரிமையாளர்களின் மாட்டுத் தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

தாய்மார்களுக்கு மகப்பேறு சிறப்பு அழைப்பு மையம்
சென்னை மாநகராட்சியில் தாய்மார்களுக்கான ஒரு மகப்பேறு சிறப்பு அழைப்பு மையம் அமைக்கப்படும். இந்த மையத்தில் 5 செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர். தென் சென்னை பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அடைத்து அபராதம் வசூலிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டாரத்தில் புதியதாக ஒரு மாட்டுத் தொழுவம் அமைக்கப்படும்.

களப்பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் மிக முக்கிய பணிகளை மேற்கொள்ளும் தூய்மை, சுகாதாரம் மற்றும் சாலை பணியாளர்களின் உடல் நலனை பேணி காக்கும் வகையில் அனைத்து நான்காம் நிலை களப்பணியாளர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலம் முழு உடல் பரிசோதனை, பெருநகர சென்னை மாநகராட்சியின் செலவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அடிப்படை தொழிலாளர்களின் நலன் காக்கப்படும். இதற்காக ₹8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ₹3 கோடியாக உயர்வு
2024-25ம் நிதியாண்டு முதல் சென்னை மாநகராட்சி மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ₹2 கோடியிலிருந்து ₹3 கோடியாக உயர்த்தப்படும். 2024-25ம் நிதியாண்டு முதல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ₹40 லட்சத்திலிருந்து ₹45 லட்சமாக உயர்த்தப்படும்.

The post 2024-25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம்: 82 அறிவிப்புகளை வெளியிட்டார் மேயர் பிரியா appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Corporation ,Mayor ,Priya ,Chennai ,Chennai Corporation ,Chennai… ,Corporation ,Mayor Priya ,
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...