×

வருவாய் வரவு ₹4464.60 கோடி செலவினம் ₹4727.12 கோடி: நிதிநிலை குழுத்தலைவர் தகவல்

சென்னை, பிப்.22: 2024-25ம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் வருவாய் வரவு ₹4464.60 கோடியாகவும், வருவாய் செலவினம் ₹4727.12 கோடியாகவும் இருக்கும் என நிதி நிலைக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தில் வரிவிதிப்பு மற்றும் நிதி நிலைக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் பேசியதாவது: 2024-25ம் நிதியாண்டின் வருவாய் கணக்கு தலைப்பில், வருவாய் வரவு ₹4464.60 கோடியாகவும், வருவாய் செலவினம் ₹4727.12 கோடியாகவும் இருக்கும். மூலதன வரவு ₹3455 கோடியாகவும், மூலதனச் செலவு ₹3140.58 கோடியாகவும் இருக்கும். 2023-24ம் நிதியாண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டின்படி ₹4131.70 கோடியாக இருந்த வருவாய் கணக்கின் வரவுகள், இதே ஆண்டின் திருத்திய மதிப்பீட்டின்படி ₹4508.30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024-25ம் நிதியாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடு ₹4464.60 கோடியாக இருக்கும். 2023-24ம் நிதியாண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ₹4466.29 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இனங்களின் செலவு, திருத்திய மதிப்பீட்டில் ₹4617.27 கோடியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2024-25ம் நிதியாண்டில் வருவாய் இனங்களின் செலவு ₹4726.12 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வருவாய் இனங்களில் முதன்மையான பங்கு வகிப்பது சொத்துவரியாகும். 2023-24ம் நிதியாண்டின் திருத்திய மதிப்பீட்டில் ₹1680 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் இந்த வருவாய் ₹1750 கோடியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24ம் நிதியாண்டின் திருத்திய மதிப்பீட்டில் ₹500 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2024-25ம் நிதியாண்டிற்கு வரவு செலவு திட்டத்தில் தொழில்வரியின் வருவாய் ₹550 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி வருவாய் 2023-24ம் நிதியாண்டின் திருத்திய மதிப்பீட்டில் ₹250 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு, 2024-25ம் நிதியாண்டில் இவ்வினத்தின் மீதான வருவாய் ₹300 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24ம் நிதியாண்டின் திருத்திய மதிப்பீட்டின்படி மாநில நிதிக்குழு மானியம் அரசின் வரித்தொகுப்பிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் வருவாய் ₹968 கோடி என நிர்ணயிக்கப்பட்டு, 2024-25ம் நிதியாண்டில் இவ்வினத்தின் மீதான மான்ய வருவாய் ₹980 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

2023-24ம் நிதியாண்டின் திருத்திய மதிப்பீட்டின்படி, தொழில் உரிமக் கட்டணம், கட்டிட உரிமக் கட்டணம், மத்திய மற்றும் மாநில அரசிடமிருந்து பெறப்படும் மானியங்கள், அங்காடி உரிமக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் மற்றும் ஏனைய வருவாய் இனங்களின் மூலமாக ₹1110.30 கோடி வருவாய் ஈட்டுமென கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வருவாய் 2024-25ம் நிதியாண்டில் ₹884.60 கோடியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மாதாந்திர சம்பளம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியப் பயன்கள், பிற ஓய்வூதியப் பயன்கள் மற்றும் சென்னை மாநகராட்சியால் நேரடியாக நியமிக்கும் தற்காலிகப் பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை கணக்கு தலைப்பின்கீழ் மேற்கொள்ளும் வகையில் 2023-24ம் நிதியாண்டின் திருத்திய மதிப்பீட்டின்படி ₹1907.10 கோடியாகவும், இச்செலவினம் 2024-25ம் நிதியாண்டில் இக்கணக்கு தலைப்பின்கீழ் ₹2046.95 கோடியாகவும இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாகச் செலவினத்திற்கென 2023-24ம் நிதியாண்டின் திருத்திய மதிப்பீட்டில் ₹260.39 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் ₹282.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு, இயக்கச் செலவுகள் மற்றும் திட்டச் செலவுகள், தமிழக அரசின் மான்யங்களைக் கொண்டும், தனியார் மயமாக்கப்பட்ட மண்டலம் 1, 2, 3, 7, 11, 14 மற்றும் 15 ஆகியவற்றில் துப்புரவு பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுதல், எரிபொருள் செலவினங்கள் போன்ற செலவினங்களுக்காக 2023-24ம் நிதியாண்டு திருத்திய மதிப்பீட்டில் ₹1583.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் இதற்கு ₹1507.72 கோடி அளவிற்கு செலவினம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post வருவாய் வரவு ₹4464.60 கோடி செலவினம் ₹4727.12 கோடி: நிதிநிலை குழுத்தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Finance Committee ,Chennai ,Chennai Corporation ,Finance Standing Committee ,Sarbhajayadas ,Mayor ,Priya ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...