×

வனத்துறை ஊழியர்கள் விடுமுறை எடுக்க தடை தீ தடுப்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு கோடை காலம் முடியும் வரை

வேலூர், பிப்.22: தமிழ்நாட்டில் வனப்பகுதியில தீ பரவலை தடுக்கும் வகையில் கோடைக்காலம் முடியும் வரை வனத்துறையினர் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீ தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோடை காலத்திற்கு முன்பே வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது. இதனால் தற்போதே வனப்பரப்பை பாதுகாக்கும் ஏற்பாடுகளில் வனஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோடை காலத்தில் கடும் வெயிலின் காரணமாக ஆங்காங்கே தீ பரவல் ஏற்படும். இந்த தீ பரவலை தடுக்க காட்டிற்குள் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகின்றன. வனத்தையொட்டி செல்லும் சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் சருகுகளை அப்புறப்படுத்துதல், மனிதர்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்தல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர். இதற்காக வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், வனக்கிராம குழுக்களில் ஈடுபடும் நபர்கள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வன மண்டலம், கோட்டம், சரகங்களில் இந்த தீ தடுப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கோடை காலம் முடியும் வரை சரகங்களில் பணியாற்றி வரும் வன ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் தீ பரவலை தவிர்க்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதும், வனக்கிராம மக்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு தீ ஏற்பட்டாலும் உடனே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு வனச்சரகத்திலும் நடப்பாண்டு கோடையில் தீ விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமுடன் பணியாற்றி வருகிறோம். தீ தடுப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம். இதனால் கோடைகாலம் முடியும் ஜூன் மாதம் வரை வனத்துறை ஊழியர்கள் யாருக்கும் விடுமுறை கிடையாது. தவிர்க்க முடியாத காரணங்களை தவிர்த்து யாரும் விடுமுறை கேட்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

The post வனத்துறை ஊழியர்கள் விடுமுறை எடுக்க தடை தீ தடுப்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு கோடை காலம் முடியும் வரை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tamil Nadu ,
× RELATED 2012ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய...