×

அடிப்படை வசதி செய்யக்கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை

திருவாடானை: திருவாடானை அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாடானை அருகே திருவடிமிதியூர் – கிழக்கு புதுக்குடியிருப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கல்லூர் ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் தமிழ்புலிகள் கட்சியின் மாநில துணை செயலாளர் தமிழ்முருகன், மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் அந்த கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரி திருவாடானை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட அந்த கிராம மக்கள் தங்களது கோரிக்கையினை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகனிடம் மனுவாக அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், கல்லூர் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

The post அடிப்படை வசதி செய்யக்கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Union ,Thiruvadanai ,Thiruvadimithiyur ,East Pudukudiripu ,
× RELATED கதம்ப வண்டுகள் தீவைத்து அழிப்பு