×

சென்னையில் இன்று லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் 2வது நாளாக ரத்து: பயணிகள், சரக்கு சேவை முடக்கம்

மீனம்பாக்கம்: லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பிராங்க்பர்ட்-சென்னை-பிராங்க்பர்ட் இடையிலான லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவை 2வது நாளாக ரத்து செய்யப்பட்டது. மேலும், பிராங்க்பர்ட்டில் இருந்து சென்னை வந்துவிட்டு ஹாங்காங் புறப்பட்டு செல்லும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஜெர்மன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் நீண்ட காலமாக சர்வதேச நாடுகளுக்கு பயணிகள் மற்றும் சரக்கு விமான சேவைகளை இயக்கி, பயணிகளிடையே பிரபலமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனத்தில் சமீபகாலமாக ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜனவரி மாதம் ஒரு நாள் வேலைநிறுத்தமும் பின்னர் உலகமெங்கிலும் அதன் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, ஜெர்மன் நாட்டின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து வழக்கமாக முதல் நாள் நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான முனையத்துக்கு வரும். பின்னர் இங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகாலை 1.50 மணியளவில் மீண்டும் பிராங்க்பர்ட் நகருக்கு புறப்பட்டு தினசரி நேரடி விமான சேவை நடைபெறுவது வழக்கம். தற்போது லுப்தான்சா விமான நிறுவன ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தினால், சென்னை விமான நிலையத்தில் இன்று 2வது நாளாக பிராங்க்பர்ட் நகரில் இருந்து வந்து, இங்கிருந்து புறப்பட்டு செல்லும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 2 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல், லுப்தான்சர் ஏல்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக, பயணிகள் சேவை மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் சரக்கு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. முன்னதாக, இந்நிறுவனத்தின் சரக்கு விமானம் நாள்தோறும் பிராங்க்பர்ட் நகரிலிருந்து புறப்பட்டு நள்ளரவு 11.10 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்தின் சரக்ககப் பகுதிக்கு வரும். பின்னர் இங்கு சரக்குகளை இறக்கிவிட்டு, மீண்டும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் மறுநாள் மதியம் 12.55 மணியளவில் ஹாங்காங் புறப்பட்டு செல்வது வழக்கம். இன்று 2வது நாளாக சென்னையில் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதனால் சென்னையில் இருந்து ஜெர்மன், அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, தென்கொரியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு சரக்குகள் அனுப்பும் பணி முற்றிலும் முடங்கியது. இதேபோல் மேற்கண்ட நாடுகளுக்கு செல்லவேண்டிய பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

The post சென்னையில் இன்று லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் 2வது நாளாக ரத்து: பயணிகள், சரக்கு சேவை முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Lufthansa Airlines ,Chennai ,Meenambakkam ,Frankfurt ,Chennai airport ,Hong Kong ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்