×

முழங்கால் காயத்தால் கே.எல்.ராகுலும் ஆடவில்லை ராஞ்சி டெஸ்ட்டில் பும்ராவுக்கு ஓய்வு ஏன்?.. முகேஷ்குமாருக்கு மீண்டும் அழைப்பு

ராஞ்சி: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்ட் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த 3வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் 4வது டெஸ்ட் ராஞ்சியில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ராஞ்சி வந்து சேர்ந்தனர். அங்கு இன்று பயிற்சியை தொடங்கினர்.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு வேலை பளு காரணமாக 4வது டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 3 டெஸ்ட்டிலும் பும்ரா 17 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். குறிப்பாக விசாகப்பட்டினத்தில் 2 இன்னிங்ஸிலும் 91 ரன்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3 டெஸ்ட்டிலும் அவர் 80.5 ஓவர் வீசி உள்ளார். ராஜ்கோட் டெஸ்ட்டிலேயே அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது 1-1 என தொடர் சமனில் இருந்ததால் ஆடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தற்போது இந்தியாதொடரில் முன்னிலை வகிப்பதாலும், அடுத்ததாக ஐபிஎல், டி.20 உலக கோப்பை வர உள்ளதாலும் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 3வது டெஸ்ட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முகேஷ்குமார் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். ராஞ்சி டெஸ்ட்டில் சிராஜூடன் முகேஷ் குமார் அல்லது அறிமுக வீரராக ஆகாஷ்தீப் இடம்பெறக்கூடும். ராஞ்சி டெஸ்ட் ஓய்வு அளிக்கப்பட்டாலும் தர்மசாலாவில் மார்ச் 7ல் தொடங்கும் கடைசி டெஸ்ட்டில் பும்ரா ஆடுகிறார். ஏனெனில் தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பும்ராவின் பங்கு முக்கியமானதாகும்.

இதனிடையே முழங்கால் வலியால் அவதிப்படும் கே.எல்.ராகுல் 4வது டெஸ்ட்டிலும் இடம்பெறவில்லை.
ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 86, 2வது இன்னிங்சில் 22 ரன் எடுத்த கே.எல்.ராகுல் 2வது டெஸ்ட்டில் இருந்துவிலகினார். 3வது டெஸ்ட்டில் சேர்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் விடுவிக்கப்பட்டார். தற்போது 4வது டெஸ்ட்டையும் தவறவிடும் அவர், உடற்தகுதியை எட்டும் பட்சத்தில் கடைசி டெஸ்ட்டில் இடம்பெறக்கூடும் என தெரிகிறது.

துணை கேப்டன் யார்?
இந்திய டெஸ்ட்அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ராஞ்சி டெஸ்ட்டில் துணை கேப்டன் யார் என அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ரோகித்சர்மா களத்தில் இல்லாத நேரத்தில் மூத்த வீரர்களான அஸ்வின் அல்லது ஜடேஜா அணியை வழிநடத்தக்கூடும் என தெரிகிறது.

The post முழங்கால் காயத்தால் கே.எல்.ராகுலும் ஆடவில்லை ராஞ்சி டெஸ்ட்டில் பும்ராவுக்கு ஓய்வு ஏன்?.. முகேஷ்குமாருக்கு மீண்டும் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : K. ,L. Rahul ,Bumrah ,Ranchi ,Mukesh Kumar ,India ,England ,Hyderabad ,Visakhapatnam ,Rajkot ,Ranchi Test ,Dinakaran ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...