×

திருமயம், அரிமளம் பகுதியில் வறட்சியால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் கருகியது

*கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு

திருமயம் : திருமயம், அரிமளம் பகுதியில் தொடர் வறட்சி காரணமாக மேய்ச்சல் நிலங்களில் புற்கள், புதர் செடிகள் கருகியது. இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.

விவசாயத்தில் வரும் எச்சங்கள் அதாவது வைக்கோல், தவிடு ஆகியவற்றை வீனாகமல் பயன்படுத்த விவசாயிகள் கால்நடைகள் வளர்பில் ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் விவசாயத்தில் லாபம் கிடைப்பதுடன் விவசாயம் மூலம் வீணாகும் பொருட்களை கால்நடைகளுக்கு கொடுத்து கால்நடைகளிடம் இருந்து பால், இறைச்சி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து விவசாயிகள் கனிசமான லாபம் அடைந்தனர்.

மேலும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் சானத்தை கொண்டு இயற்கை உரம் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தினர். எனவே கால்நடைகள், விவசாயம், விவசாயிகள் வாழ்க்கை ஒரு வாழ்க்கை சக்கரம் போல் செயல்பட்டது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பருவ நிலை மாற்றத்தால் திருமயம், அரிமளம் பகுதிகளில் மழை சரிவர பெய்யவில்லை. இதனிடையே கடந்தாண்டு பருவமழை விவசாயிகள் எதிர்பார்த்ததை விட மிக மிக குறைவான அளவே பெய்துள்ளது. இதனால் விவசாயத்திற்கு போதுமான நீர் இல்லாமல் விவசாயிகள் விவசாயம் செய்யும் பரப்பளவு வெகுவாக குறைந்துள்ளது.

எனவே பெரும்பாலான விவசாய நிலங்கள் சீமை கருவேல மரங்கள் மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் விவசாயம் மூலம் கிடைக்கும் உபரி பொருட்களான வைக்கோல், தவிடு தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கால்நடைகளை காப்பாற்ற கடையில் தீவன வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீவன விலை ஏற்றம் விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகாததால் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளபட்டனர். 30 வருடங்களுக்கு முன்னர் திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள ஒவ்வொரு விவசாயி வீடுகளிலும் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் இருந்த நிலையில் தற்போது ஒரு வீட்டில் ஒரு கால்நடை இருப்பதே அபூர்வமாக உள்ளது. தற்போது விவசாயிகள் பெரும்பாலும் பாலுக்காக மட்டுமே கால்நடை வளர்க்கின்றனர். அதுவும் கலப்பின பசு மாடுகள் மட்டுமே வளர்க்கபடுகிறது.

அதேசமயம் விவசாயத்திலும் பூச்சி கொல்லி மருந்துகள், உரம் ஆக்கிரமிப்பால் விவசாயிகளுக்கு மாடுகள் மூலம் கிடைக்கும் இயற்கை உரமான சானம் தேவையில்லாமல் போனது. இந்நிலையில் திருமயம், அரிமளம் பகுதியில் தற்போது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வயல், காட்டுபகுதியில் உள்ள புற்கள், புதர்செடிகள் கருகிய நிலையில் பாலைவனம் போல் உள்ளது.

விவசாயமின்றி வீடுகளில் கால்நடைக்கு தேவையாக தீவனம் இல்லாத நிலையில் மேய்ச்சல் நிலங்களும் கருகிவிட்டதால் கால்நடைகள் தீவன தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர் . இனதால் எஞ்சி இருக்கும் கால்நடைகளையும் விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம், திருமயம் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கிராமமாக சென்று வீடுகளில் உள்ள கால்நடைகளை கணக்கெடுத்து அதற்கு தேவையான தீவன வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post திருமயம், அரிமளம் பகுதியில் வறட்சியால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் கருகியது appeared first on Dinakaran.

Tags : Tirumayam ,Arimalam ,Thirumayam ,Puthukkottai district ,
× RELATED புதுக்கோட்டை அருகே வழக்கு...